சனி, 11 ஏப்ரல், 2009

கல்லறைப் பாடம்

மற்றுமொரு நவம்பர் தினம். இதாகாவில் அக்டோபரிலேயே பனி கொட்டத் துவங்கி விடும். பனி என்றால் தமிழகத்தில் மார்கழி மாதத்தில் இரவில் குளிரும்போது பனி கொட்டுகிறது என்போமே, அந்த மாதிரியில்லை. உறைபனி. வெள்ளை வெளேரென்று உடைந்த ஐஸ் கட்டித்தூள் மேலிருந்து கொட்டும். கொட்டிய பனி குவிந்து தெருவில், தெருவோர நடைமேடையில், புல்வெளியில் என்று எங்கும் படர்ந்து வெள்ளைத்தோல் போர்த்தி எது தெரு, எது நடைமேடை என்று தெரியாமல் இருக்கும். மேலுள்ள ஐஸ் தூளுக்கடியில் கெட்டியாகிப் போன ஐஸ், கண்ணாடி போல் "ஸ்லீட்" என்று சொல்லக்கூடிய வழுக்கும் தரையாக இருக்கும். விவரம் தெரியாமல் காலை வைத்தால் தலை குப்புற விழ வேண்டியதுதான். வீசும் காற்றோடு நடுக்கும் குளிரோ பூஜ்யத்திற்குக் கீழே இருக்கும்.இதில் புகுந்து புறப்பட வேண்டுமென்றால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடை, அணிகலன்கள் தேவை. முதலில் சாதாரண உள்ளாடைகள். அதன் மேல் வெப்ப உள்ளாடைகளை மேலுக்கும், கீழுக்கும் அணிய வேண்டும். இவை உடல் வெப்பத்தை முடிந்தவரை தேக்கி வைத்திருக்கும். பின்னர் எப்பொழுதும் அணியும் மேல்சட்டையும், கால்சராயும். அதன் மேல் கம்பளி அல்லது சின்தெடிக் ஸ்வெட்டர். அதன் மேல் 'டௌன் ஜாக்கெட்'. இந்த டௌன் ஜாக்கெட்டில் தைத்த சின்தெடிக் உறைகளில் வாத்துகளின் இறக்கைகள் நிரப்பப் பட்டிருக்கும். இயற்கையில் குளிரைக் காக்க உதவும் பொருள் செயற்கையாக மனிதனின் உதவிக்கு வருகிறது. காலில் கம்பளிக் காலுறை அணிந்து, அதன் மேல் சாதாரண பருத்திக் காலுறை அணிந்து அதன்மேல் வழுக்கி விழாத 'கிரிப்' உடைய நீண்ட ஷூ ஒன்றை அணிய வேண்டும். ஸ்லீட்டாக இருந்தாலும் ஒரேயடியாக வழுக்கி விடாமல் ஓரளவுக்கு சமாளித்து விடலாம். பனித்தூளும் காலுக்குள்ளே புகுந்து தொல்லை செய்யாது. கைகளில் தடித்த உறை அதன்பின். தலைக்குக் கம்பளியால் ஆன 'குரங்குத்தொப்பி'. அதன்மேல் டௌன் ஜாக்கெட்டின் முக்காடை எடுத்துப்போட்டுக் கொள்ள வேண்டும்.இவையனைத்தையும் போட்டுக் கொள்ளவே கிட்டத்தட்ட பத்து நிமிடம் பிடிக்கும். உறையிட்ட கைகளை டௌன் ஜாக்கெட்டின் பைகளுக்குள் விட்டுக் கொண்டு, பனிக்கரடி பனிமலைகளில் நடப்பது போல மெதுவாக உதிர்பனித் தரையில் நடக்க வேண்டும்.இவ்வளவுக்குப் பின்னும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மூக்கு மரத்துப் போய் வலிக்கும்.இப்படிப்பட்ட அந்தக் காலை நேரத்தில் என் எடையில் 10 கிலோ கூடுதலாக பனிக்கு பயந்து ஆடை அணிந்து பல்கலைக் கழகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. சம்மர்ஹில் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து எல்லிஸ் ஹாலோ ரோட் வழியாகத் தியரி செண்டர் செல்ல வேண்டும். சாலை ஒரு கல்லைறை வளாகத்தைச் சுற்றிக் கொண்டு போகும். மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். கல்லறையின் நடுவே நடந்து போவதானால் ஒரு கிலோமீட்டர் குறையும்.எனக்கு சாவின் மேல் எப்பொழுதுமே பயம். சின்ன வயதிலிருந்தே எந்த சாவுக்கும் நான் போனதில்லை. என் தாத்தா, பாட்டி இறந்த போதும் பிறர் கண்காணிப்பில் விடப்பட்டு சாவை விட்டு விலகியே இருந்திருக்கிறேன். சாவு என்பது தீட்டு. விலகி இருக்க வேண்டும். சாவு என்பது அமானுஷ்யம். புரியாதது. புதிரானது. பயமூட்டக் கூடியது. உடல் எரிக்கப்படுகிறது, உடல் சிதைகிறது. எலும்புகள் சேகரிக்கப்படுகிறது. சாம்பல் தனியாக சேகரிக்கப்படுகிறது. உயிருடன் இருந்தவர் திடீரென்று சாம்பலாகவும், எலும்பாகவும், மிச்சம் மீதி சடங்குகளுக்காக வெளியே உலவும் ஆன்மாவாகவும் மாறுவது மனதில் பீதியைக் கிளப்புவது. அந்த ஆன்மா சொர்கத்துக்குப் போகப் போகிறதா, இல்லை நரகத்துக்குப் போய்த் திண்டாடப் போகிறதா என்பது தெரியாமலேயே, நன்மையே நடக்கும் என்று சடங்குகள் செய்யப்படுகின்றன. சடங்குகள் செய்ய வருபவரிடம் பேரம் பேசும்போதும் பயமே ஏற்படுகின்றது. இவர் பத்து ரூபாய் குறைந்து விட்டது என்று நம்மிடம் கோபம் கொண்டு மந்திரத்தைத் தவறாகச் சொல்லி நரகத்துக்கு அனுப்பி விடுவாரோ என்று திகில்.எக்ஸார்சிஸ்ட், ஓமன் போன்ற ஆங்கிலப் படங்களில் கெட்ட ஆவிகள் கல்லறையில்தான் சுற்றும். திடீரென்று எழுந்திருந்து ஊருக்குள் வந்து நாசத்தை உண்டு பண்ணும். இரத்தம், கோரச் சாவு, பழி வாங்கல், பீதி, ஓட்டம், கலக்கம், கவலை என்று ஏன் இந்த அமானுஷ்யங்கள், பிறர் வாழ்க்கையைச் சின்னாபின்னப் படுத்தி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஆங்கிலப் படங்களில்தான் என்றல்ல, இந்தியக் கதைகளிலும், கடவுள் வழிபாட்டு சுலோகங்களிலும்தான் பேய்கள், கொள்ளிவாய்ப் பிசாசுகள், புழக்கடை முனிகள், பிள்ளையைத் தின்னும் பிரம்ம ராட்சதர்கள், பில்லி, சூனியம் என்று அமானுஷ்யத்தை வைத்து எத்தனை எத்தனை?இதெல்லாம் வெறும் பொய்யா? காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தவைகளை மீறிப் பகுத்தறிவு திடீரென்று வந்து விடுமா? நான் எப்பொழுதும் அந்தக் கல்லறையை ஒட்டி, ஆனால் வெளியிலேயே நடப்பேன். கல்லறைக்கு நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கிடையாது. நெருக்கி எழுப்பப்பட்ட பைன் மரங்கள்தான் வேலி. சில இடங்களில் குட்டைச் சுவர் எழுப்பப் பட்டிருக்கும். கல்லறையில் உள்ளே தார்ச் சாலைகள் ஓடும். இரண்டு இடங்களில் பெரிய கம்பிக் கதவுகள் இருக்கும். உள்ளே போக ஒன்று, வெளியே வர மற்றொன்று. எப்பொழுதும் இந்தக் கதவுகள் பூட்டியே இருக்கும். ஏதேனும் சவ அடக்கம் நடைபெறும்போது மட்டும் இந்தக் கதவுகள் திறந்துவிடப்பட்டு, கார்கள் மற்றும் சவ வண்டிகள் உள்ளே வந்து போகும். இந்தக் கதவுகளைத் தவிர இரண்டு சிறு சுழல் கம்பி கேட்டுகள் உண்டு. இதில் மனிதர்கள் புகுந்து வெளி வரலாம். கல்லறை முழுவதும் புதைக்கும் இடங்களெல்லாம் புல் தரைகள். பல மரங்கள் நடப்பட்டு, வேனில் காலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும்போதும், இலைகள் உதிர்ந்து மொட்டை மரங்கள் பனிக்காலத்தை எதிர்நோக்கும் போதும், பனி கொட்டி கல்லறை முழுதும் வெள்ளையுடையில் காட்சியளிக்கும்போதும், மழைத் துளிகள் விடாமல் சொறியும்போதும் அந்தக் கல்லறை எப்பொழுதும், எல்லாக் காலங்களிலும் அமைதியாக, ஆனால் எனக்குள் உள்ளூர பயத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு கம்பீரத்துடன் இருக்கும்.ஒரு சில சவ அடக்கங்களை வெளியே போகும்போது பார்த்திருக்கிறேன். நின்று கவனிக்கவோ அல்லது உள்ளே போய்ப் பார்க்கவோ இதுவரை தைரியம் இருந்ததில்லை. ஐந்திலிருந்து பத்து பேர்தான் வந்திருப்பர். சவ வண்டி தனியாகத் தெரியும். அதிலிருக்கும் சவப்பெட்டி செத்தவரின் செல்வத்தைப் பொறுத்து அலங்காரத்துடனோ அல்லது சாதாரணமாகவோ இருக்கும். அதற்குமேல் பார்க்காமல் வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து போய்விடுவேன்.அன்று காலை எனக்குள் என்னவோ தோன்றியது. இத்தனை குளிரில் ஆவிகள் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் என்ற நம்பிக்கையோ? இந்த வழுக்கும் தரையில், கனக்கும் உடையில் ஒரு கிலோமீட்டரைக் குறைத்து விடலாம் என்ற எண்ணமோ? சிறிது தயங்கினேன். பின்னர் சுழலும் கம்பி கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நடக்கத் தொடங்கினேன். உள்ளே செல்லும் சாலையை அப்படியே தொடர்வதுதான் சரி என்று தோன்றியது. சாலையை விட்டு விலகி நடந்தால் ஏதேனும் ஒருவரது சவப்பெட்டியைப் புதைத்ததன் மேல் கால்வைக்க வேண்டிவரும். அது அவரையும், அவரது உறவினரையும் அவமதித்ததாகலாம். தூங்கிக் கொண்டிருக்கும் ஆவிகள் எதனையும் ஏன் வீணாக உசுப்பி விட வேண்டும்? சாலை வளைந்து நெளிந்து, மேலும் கீழுமாக எழும்பியும் இறங்கியும் சென்றது. அப்பொழுதுதான் நான் அந்த வயதானவரைப் பார்த்தேன்.நான்கு சலவைக்கல் பதித்த உறங்கும் சவங்களிடத்தில் இருக்கும் ஒரு கான்கிரீட் பெஞ்சில் அவர் உட்கார்ந்திருந்தார். கிட்டத்தட்ட 70 வயதிருக்கலாம். கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்தார். அதன் மேல் கறுப்பு நிறத்தில் ஒரு ஓவர்கோட் போட்டு பட்டன்களைப் போடாதிருந்தார். தலையில் பழுப்பு நிறத் தொப்பி அணிந்திருந்தார். அதில் பனி பெய்திருந்தது. ஓவர்கோட்டில் பனித்துளிகளும், உருகி வழியும் நீரும்."ஹல்லோ, இளைஞனே!""நற்காலையாகுக!" என்று சொல்லிவிட்டு சிறிது தயங்கியவாறே அவர் முன் நின்றேன்."இங்கு வந்து உட்காரு என்னருகே!"சென்று அவர் அருகே அமர்ந்தேன். சிறிது நேரம் நாங்கள் இருவரும் பேசவில்லை. எத்தனை நேரம் ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் அலுவலகத்திற்கு நான் உடனடியாகப் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. நான்கு வருடமாகச் செய்துகொண்டிருக்கும் பிஎச்டி ஒரு பனி கொட்டும் நாளில் முடிந்து விடப் போவதில்லை."இன்றுதான் என் மகன் இறந்த நாள். இன்றோடு இரண்டு வருடங்கள்.""ஓ, மிகவும் வருந்துகிறேன்.""அதோ, அதுதான் என் மகன். பக்கத்தில் அவனது மனைவி, அதற்குப் பக்கத்தில் அவர்களது சிறு மகள், இந்தப் பக்கம் என் மனைவி. அதற்கடுத்த இடம் எனக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்."எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முழுக் குடும்பமும் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென்று அவர் முடிவெடுத்து அந்த இடத்தை முன்பதிவு செய்து வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சினிமா தியேட்டரில் இருக்கைகளை ஆக்ரமிப்பது போல் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். இந்தக் கிழவரும் தன்நாள் என்று வருமோ என்று தனக்குரிய இடத்தின் அருகிலேயே உட்கார்த்திருப்பவர் போலத் தோன்றியது.என் முகத்தைப் பார்த்தது, "ஏன் உன் முகத்தில் பயம்?" என்றார்."அய்யா, இதுதான் நான் கல்லறை ஒன்றின் வழியே வருவது முதல் தடவை.""அதற்கா பயம்? இங்கிருப்பது என் குடும்பத்தவர்கள், அது போன்ற மற்ற மனிதர்கள். இன்னும் சில நாட்கள் கழித்து நானும் இங்குதான் புதைக்கப்படுவேன்."நான் ஒன்றும் சொல்லவில்லை."உங்கள் நாட்டில் இறந்தவர்களை என்ன செய்வீர்கள்?""எங்கள் குடும்பங்களில் எரித்து விடுவோம். எங்கள் நாட்டில் சிலர் புதைக்கவும் செய்வார்கள்.""மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் மண்ணுக்குள்ளேயே போகட்டும் என்பது எங்கள் மதம். நாங்கள் உயிரற்ற உடலை எரித்துச் சிதைக்க மாட்டோம். நான் ஒரு தீவிர கிறித்துவன் அல்லன். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அந்த உயிர் இருந்தவரை எவ்வளவு புனிதம் அந்த உடலுக்கு உண்டோ, அந்தப் புனிதம் உயிர் போன பின்னும் தொடரும். எனது உறவு இங்கு பெட்டிகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட உடல்களோடும் தொடர்கிறது. இவர்களிடத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. இங்குள்ள உயிர் நீத்த எவரிடமும் எனக்கு பயம் இல்லை. உனக்கும் பயம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை."நாங்கள் இருவரும் கனத்த மௌனத்தோடு அங்கே உட்கார்ந்திருந்தோம். மதியம் ஆகியிருக்கும். கொஞ்சமாக வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. குளிர் ஒன்றும் குறையவில்லை, வெளிச்சம் மட்டும்தான். அந்தப் பெரியவர் எழுந்திருந்தார்."எனக்கு இன்று மதியம் வகுப்பு ஒன்று எடுக்க வேண்டும். நீ எந்தத் துறையில் படிக்கிறாய்?""நான் இயந்திரப் பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறேன்.""அப்படியா, நான் இருப்பது வேதியியல் துறையில். ஆராய்ச்சியெல்லாம் சின்ன வயதுக்காரர்களுக்கு. நான் இப்பொழுது நேரத்தைச் செலவு செய்வதெல்லாம் துவக்க நிலை மாணவர்களுடன்.""உங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா பேராசிரியரே?"சொன்னார். சொல்லி விட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார். மெதுவாக என் பார்வையிலிருந்து மறைந்தார். எனக்கு முதலில் அவரது பெயர் விளங்கவில்லை. பிறகுதான் மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. இவருக்கு ____ வருடத்தில் வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்ததல்லவா?அன்று முதல் அங்கிருந்த மற்றும் இரண்டு வருடங்களிலும் நான் அந்தக் கல்லறை வழியாகத்தான் நடக்கத் தொடங்கினேன். அங்கு புதைக்கப்பட்ட அனைவரும் எனக்கு நண்பர்களாகவே இருந்தனர்.

கருத்துகள் இல்லை: