வெள்ளி, 22 ஏப்ரல், 2011

உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!

நம் உடலில் அணிந்து கொள்வதற்கு, பிரார்த்தனைகள் அல்லது மந்திரங்களை செபிக்கும் போது ஜபமாலையாக பாவிக்க, இறைவனின் திருமார்பில் ஆபரணமாய் சூடுவதற்கு என மூன்று விதமான பயன் பாட்டிற்கென உருத்திராட்ச மாலைகள் உருவாக்கப் படுகின்றன. ஒரே முகமுடைய மணிகளால் மட்டுமே இந்த மாலைகள் அமைக்கப் பட வேண்டும். பெரும்பாலான உருத்திராட்ச மணிகளின் நடுவில் இயற்கையாகவே துளையிருக்கும். அப்படி துளைகள் இல்லாத காய்களில் மட்டுமே துளைகளை இடுகின்றனர். இந்த தகவல் அநேக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும்.
அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையே உருத்திராட்ச மணியை வைத்தால் அவை சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும் தன்மையுடையதாம். இது போல வேறு சில முறைகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு உருத்திராட்ச மணியும் தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப் படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன். இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய் கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும் இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளியாது ஒரு மணி மற்றொரு மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது. பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.
இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி, பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன. மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக மணி” அல்லது “மேரு மணி” என அழைக்கின்றனர்.
இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம் கூடுதல் பலனை தருகிறது. காலை வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே சரியான பலனை அடைந்திட முடியும். மேலும் உருத்திராட்ச மணியால் ஆன செபமாலையை வைத்துக் கொண்டு மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள், ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்

கருத்துகள் இல்லை: