செவ்வாய், 18 நவம்பர், 2008

பிரஸர், உப்பு, பொட்டாசியம்

'பிரஸரா? உணவில் உப்பைக் குறை.' ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?
உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K)அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.
அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வுசெய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.
பிரஸரை அதிகரிப்பவை
பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.
பொட்டாசியத்தின் முக்கியத்துவம்
பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?

பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள்
நிச்சயமாக இல்லை.
ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.
ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனைவிட அதிகம் தேவைப்படும்.
பொட்டாசியம் குறைந்தால்
கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.
கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.
மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பை சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

மனிதமென்னும் மந்திரம் - சிறுகதை

அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார்."என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு யாரோ வர்றாருன்னீங்க, இன்னும் வரலையா?""வந்துடுற நேரம்தாம்பா, 8.00 கு இன்னைக்கு வர்றேன்னாரு, 8.30 ஆயிடுச்சு, வந்துடுவாரு.""சரிண்ணே, புதுசா ஒரு சாவி போட்டுருங்க, இன்னைக்கு வர்றவருக்குத் தேவைப்படும். நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்."வீட்டைக் காலிபண்ணும்போது சாவியையும் சேர்த்தே கொண்டு போயிடுறானுக, ஒவ்வொரு தடவையும் புது சாவி போட வேண்டி கெடக்கென்று புலம்பிக் கொண்டே சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.கட்டிட வேலை கண்காளிப்பாளன்ங்குறதால அடிக்கடி ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டியிருக்கும். இந்த தடவை மதுரைக்கு வந்திருந்தான். பல நேரம் வேலைக்குப் போயிட்டு அடுத்த நாள் காலையில கூட வருவான். வழக்கமா போற திருமங்கலம் ரோட்டுல பேருந்துல இருந்து இறங்கி கட்டிடம் கட்டுற இடத்துக்குப் போயிகிட்டு இருந்தான். வழியில கொஞ்சம் கூட்டமா இருக்குறதப் பார்த்து அங்கே போனான்."என்னாச்சுங்க, எதுக்கு இவ்வளவு கூட்டம்?""யாரோ வலிப்பு வந்து கிடக்குறாங்க, சாவி கொடுத்தும் நிக்கல" கூட்டத்துல இருந்த ஒருத்தர் கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னார்."தள்ளி வாங்க, அவருக்கு ஏதாவது ஆயிடப் போகுது, பக்கத்துல மருத்துவமனை எங்க இருக்கு?""பக்கத்து தெருவுல கூட ஒண்ணு இருக்குப்பா"சடாலென கீழே விழுந்திருந்தவரைத் தூக்கிக் கொண்டே கொஞ்ச தூரத்துலேயே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அளவுக்கு அதிகமாகவே கொஞ்சம் மருத்துவமனையை பரபரப்பாக்கிவிட்டான் அப்துல்லா."யாருப்பா இங்க இவரை சேத்தது, அவருக்கு சரியாயிடுச்சு, கூட்டிகிட்டுப் போகலாம். அப்படியே நர்ஸைப் பாத்து காசு எவ்வளவுன்னு கேட்டுக்குங்க" டாக்டர் எந்தவித சலனமுமின்றி தனது வேலையை முடித்துவிட்டுக் கூறினார்.வெளியே இருந்து ஓடிவந்த அப்துல்லா, மூச்சு இளைத்துக் கொண்டே கையிலிருந்த பையை கீழே வைத்தான்."நாந்தான் டாக்டர், அவரைக் கூட்டிகிட்டு வந்தேன். எப்படி இருக்காரு, பிரச்சினை ஒண்ணுமில்லையே?!"உள்ளே சென்று அந்த நபரைப் பார்த்தான்."எப்படி இருக்கீங்க. உங்க பை இதுன்னு நினைக்குறேன். எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையாம். நீங்க இனி உங்க வீட்டுக்குப் போகலாம். பணத்தைக் கட்டிட்டேன். உங்களுக்கு ஆட்டோக்கு எதுக்கும் காசு வேணுமா?""உங்களைப் பார்த்தா இஸ்லாம் மாதிரி தெரியுது, நானும்தான். இன்ஷா அல்லா, நல்ல நேரத்துல என்னைக் காப்பாத்துனீங்க. இல்லைன்னா அங்கேயே செத்திருப்பேன்.""யாருக்கா இருந்தாலும் செஞ்சிருப்பேன். எல்லாமே உயிர்தானே. காப்பாத்த மட்டும்தான் அல்லா உத்தரவிட்டிருக்கான் அழிக்க இல்ல. எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும். நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா?""நீங்க செஞ்ச உதவியே போதும். இனி நான் போய்க்குறேன். நீங்க செஞ்ச உதவியை அல்லாகிட்ட போற வரைக்கும் மறக்க மாட்டேன்".பையையும் எடுத்துக் கொண்டு சேவல் பண்ணையை நோக்கி நடந்தான் காதர்."இன்னைக்கு வர்றேன்னு சொன்னவன் நான்ந்தான். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு. என்னோட அறை எதுன்னு சொல்றீங்களா?"பாண்டியன், அப்துல்லா அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். உள்ளே இருந்த அப்துல்லாவின் படத்தைப் பார்த்துவிட்டு வியப்படைந்த காதர்"இவருதான் இங்க தங்கியிருக்காரா? இன்னைக்கு நான் செத்துருக்க வேண்டியவன், இவர்தான் என்னைக் காப்பாத்தினாரு" என்று நடந்ததைக் கூறினான்."இவனா, நல்ல பையன்பா, இந்தப் பண்ணையில இந்த மாதிரி பையனை நான் பாத்ததில்ல, இங்க திருமங்கல ரோட்டோரத்துல இருக்க ஒரு கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கட்டிடம் கட்றாங்க, அங்கதான் வேலை பாக்குது இந்தத் தம்பி. சாய்ந்திரம் வந்திடும்."இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பையிலிருந்து ஒரு கட்டிங் ப்ளேயரும், கத்தியும் எடுத்துகிட்டு உடனே தலை தெறிக்க ஓடினான். அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்தோட அஸ்திவாரத்துக்கு ஓடினான். மதுரையில தொடர்ந்து ஒரு மாசத்துக்கு அங்க இங்கன்னு குண்டு வைக்குறதுக்காக வந்தவந்தான் காதர். தன்னோட உயிரையே காப்பாத்துன அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்துல மூன்று குண்டுகளை வைத்திருந்தான். வேக வேகமாக ஒவ்வொரு குண்டா செயலிழக்க வச்சுகிட்டு இருந்தான். மூன்றாவது குண்டு படாரென்று பெரிய சத்தத்தோடு வெடித்தது. மேலே நின்ற அப்துல்லா முதற்கொண்டு இரண்டு பேர் கீழ விழுந்தார்கள். அடி பலமா படலைன்னாலும் அப்துல்லாவிற்கு கை பிசங்கிக் கொண்டது.அடுத்த நாள் பாண்டியனிடம் நாளிதழ் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தான் அப்துல்லா பிசங்கிய கையில் கட்டோடு."ஏண்ணே, வீட்டுக்கு வந்தவரோட பை இருக்கு, ஆனா ஆள் வரவே இல்லையே?!""வந்து பைய வச்சுட்டு இதோ வர்றேன்னு ஓடிப் போனவருதாம்பா. ஆளைக் காணோம். இன்னைக்குப் பார்ப்போம், வரலைன்னா பையை தூக்கி வெளியே போட்டுடுவோம்"செய்தித்தாளை உரக்க வாசித்தான்."இந்தியாவின் பல நகரங்களையடுத்து மதுரையிலும் குண்டு வெடிப்பால் மக்கள் பீதி. திருமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டால் சரிந்தது. வெடியில் சிக்கிய ஒரு வாலிபர் அடையாளம் காணமுடியாத வகையில் உடல் கருகி மரணம். அங்கே வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டது...."

இந்த நாட்டை எது காப்பாற்றும்?

எது காப்பாற்றும்?திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்றுசொல்லிவிட்டு, “ அந்தப் பணத்தை எனக்குக் கொடு” என்று வாங்கிக்கொள்ளும் சீர் திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறேன்.தன் பதவியில் இருக்கும்போது காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன்அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால்,” ஐயோ! அநியாயம்!”என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.தராசைத் தலைகீழாக நிறுக்கும் வணிகர்களை, வியாபாரிகளைப்பார்த்திருக்கிறேன்.பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறுமாதத்திற்குப் பிறகு”நகை வட்டியில் மூழ்கி விட்டது” என்று சொல்லும்அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.அரிசியில் கலப்பதற்கென்று தனிக்'கல் தொழிற்சாலை'யே நடத்தும் அரிசிவியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பைவரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆட்டுக் கறியில் மாட்டுக் கறியையும் கலந்து பிரியாணி போடும் அசைவஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குகோழி வாங்கி அதை எண்பது ரூபய்க்கு விற்கின்ற அநியாயத்தைக்கண்டிருக்கிறேன். நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும்கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்றுவிற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோவில்களைக் கண்டேனோஅவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவிமதம், ஒரே துணைக்கருவி இறைவன். அந்த மதமும், இறைவனும்தான் மனிதர்களை மீட்கமுடியும்.தெய்வபக்தி வளர வளர,”நமக்கேன் வம்பு; ஆண்டவன் நம்மைச்சபித்து விடுவான். ஆண்டவன் நம்மைத்தண்டித்து விடுவான்” என்றெல்லாம் பயந்து பொய் சொல்லாமலே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு---------எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்

வெள்ளி, 14 நவம்பர், 2008

நாளைய இந்தியா இவர்களின் கையிலா ?

வருங்கால இந்தியாவின் சிற்பிகளான மாணவர்கள் இந்தியாவை எப்படி எல்லாம் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நேற்று நேரிலும், ஊடகங்களிலும் பார்த்த மக்கள் அதிர்ந்து போய்த்தான் உள்ளனர்.நீதி மன்றத்திலே வாதாடி நீதியை நிலைநாட்டவும், சட்டத்தைக் காக்கவும் , தங்கள கட்சிக் காரரின் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவும் வேண்டி தங்கள் வாதத் திறமையால் நீதிபதிகள் முன்னால் அனல் பறக்கும் விவாதங்கள் மூலம் மோதிக் கொள்ள வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள்.கொலைகாரர்களையும் , கொள்ளைக் காரர்களையும், மோசடிப் பேர்வழிகளையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தர வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள்.ஆனால் நேற்று சென்னை சட்டக் கல்லூரியில் நடந்தது என்ன?நீதி மன்றத்திலே சட்டத்தின் துணை கொண்டு வாதப் பிரதிவாதங்களில் மோதிக் கொள்ள வேண்டிய வழக்குரைஞர் ஆவதற்காகப் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று கையில் தடிகளுடனும், கொடிய ஆயுதங்களுடனும், கூரிய கத்திகளுடனும் தங்களது சக மாணவர்களுடன் மோதிக் கொண்டனர்.தாக்குதல்கள் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நடை பெற்றுள்ளது. காவல்துறையினர் கல்லூரிக்கு உள்ளே நுழைய கல்லூரி முதல்வர் அனுமதி தராததால் காவலர்களும் வேடிக்கை பார்த்தனராம்.காவலர்கள் இதற்கு முன் பல தடவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தலையிட்டு, கடைசியில் தங்கள் மீதே குற்றம் சுமத்தப் பட்ட மோசமான அனுபவங்களை நினைத்துப் பயந்து இந்த முறை அமைதி காத்திருக்கலாம் எனத் தெரிகிறது.சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைப் பார்த்து - இவர்கள் கையில் நாளைய நீதி மன்றங்கள் எப்படி நடக்கப் போகின்றன? - சட்டத்தை இவர்களா காக்கப் போகிறார்கள் ? -என்று மக்கள் மனம் வேதனையில் துடித்தது.அதைவிட அதிர்ச்சியான தகவல் சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த மோதல் அவர்களுக்கிடையே பல நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த ஜாதி ரீதியிலான பகையால் ஏற்பட்டது என்பதே.படிக்கும் இளைஞர்கள் மனதில் சாதிய உணர்வு இருப்பதே வேதனையான தகவல் என்றால் , அதற்காக தங்களுக்கிடைய கொடூரமாக மோதிக் கொண்டார்கள் என்றால் சாதி அவர்கள் மனதில் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்க வேண்டும்.இப்படி கலவரத்தில் சில மாணவர்கள் ஈடுபட்டதை மற்ற மாணவர்கள் கை கட்டி வேடிக்கை பார்த்ததை பார்த்தால் இவர்களிடம் இருக்கும் நாட்டுப்பற்று வெளிப்படவில்லையா?தங்கள் கல்லூரியிலேயே தங்களது சக மாணவன் ஒருவன் தங்கள் கல்லூரி மாணவர்களாலேயே தாக்கப் படுவதைத் தடுக்காது வேடிக்கை பார்த்த இந்த மாணவர்களிடம் சமூக அக்கறையை எப்படி எதிர்பார்ப்பது?படிக்காத பாமரர்கள் சாதிப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது இதற்கெல்லாம் காரணம் கல்வியறிவு இல்லாததே, மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது என்று பலரும் நம்பி வந்த சூழலில் சட்டம் பயிலும் மாணவர்களே மோதிக் கொண்டது அனைவரையும் அதிரச் செய்துள்ளது.சாதிகள் இல்லை, சாதி வேற்றுமைகள் பாராது ஒன்றுபட்டு உழைத்தால் மட்டுமே நமது நாட்டை உயர்த்த முடியும் என்று பாமர மக்களுக்கு உணர்த்த வேண்டிய மாணவ சமுதாயமே சாதியால் பிளவு பட்டு வன்முறையில் ஈடுபட்டது எந்த வகையிலும் ஏற்க முடியாதது அல்லவா?நல்லவர்களோ கெட்டவர்களோ இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த மாணவர்கள் தானே, இவர்களை எப்படி நல்வழிப் படுத்தி , நல்ல ஒழுக்கம் உள்ள குடிமகன்களாக மாற்றுவது என சிந்தித்து செயல்பட வேண்டியது அரசின் கடமை.இந்தப் பிரச்சினையிலும் அரசானது வழக்கம் போல வழக்கு, விசாரணை,கைது , விசாரணைக் கமிசன் என்று எதையாவது செய்து விட்டு அத்துடன் தனது கடமை முடிந்து விட்டதாக எண்ணி ஒதுங்கி விடக் கூடாது.இது போன்ற பிரச்சினைகளின் மூல காரணம் என்ன?படிக்கும் மாணவர்களின் மனதில் சாதி வெறி குடியேற என்ன காரணம்?படித்த மனங்களில் கூட சாதிய எண்ணங்கள் ஊடுருவ என்ன காரணம்?படித்தவர்கள் மத்தியிலும் தலை தூக்கும் இந்த சாதி வெறியை ஒழிக்க என்ன வழி?மாணவர்களுக்கு என்ன மாதிரியான வழிகளில் சாதிய ஒழிப்பு குறித்து போதிக்கலாம்?மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக கல்வியில் செய்யப் பட வேண்டிய மாறுதல்கள் என்னென்ன?எதிர்கால சந்ததிகள் சாதிய எண்ணம் துளியும் இல்லாமல் வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?என்றெல்லாம் பொறுப்புணர்வுடன் அலசி ஆராய்ந்து ஆரம்பக் கல்வியில் இருந்தே மாணவர்களை, சாதிய எண்ணங்கள் இல்லாத சமூக அக்கறை கொண்ட நல்ல குடிமகன்களாக மாற்றக் கூடிய வகையில் கல்வித் திட்டத்தையே மாற்றி அமைத்து இனி வரும் சந்ததிகளாவது அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உறுதி கொடுக்க வேண்டியது அரசின் கடமை.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடங்கள் போதிப்பது போல நல்லொழுக்கத்தையும், நாட்டுப் பற்றையும், மாணவர்களின் எதிர்காலக் கடமைகளையும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும்.மாணவர்களை அறிவிற் சிறந்த சான்றோர்களாக மாற்றும் அதே வேளையில் ஒழுக்கமுள்ள, நாட்டுப் பற்றுள்ள நல்ல குடிமகனாகவும் மாற்றுவதே முழுமையான கல்வி ஆக அமையும்.அப்படி இல்லாத பட்சத்தில் மாணவர்கள் படித்தும் பாமரர்களாகவே இருப்பர், நாட்டில் கல்வி அறிவு பெருகுவதால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்...............

புதன், 12 நவம்பர், 2008

நவகிரகங்களுக்கு என தனிக்கோயில்

தமிழகத்தில் நவகிரகங்களுக்கு என தனிக்கோயில் உண்டென்றால் அது சூரியனார் கோயில்தான். நவகிரக நாயகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தைத் தொலைத்த இடமும் இதுதான்.
ஊரின் பெயருக்கேற்ப மூலவர், சிவசூரியப் பெருமான். தன் மனைவிகளான உஷாதேவி, சாயா தேவி சகிதம் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். அவர் தன் இருகரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குவது கொள்ளை அழகு!
சூரியனின் வெம்மையைத் தணிப்பது போல அவருக்கு நேரெதிரே வியாழ பகவான் (குரு) காட்சியளிக்கிறார்.
வானவெளியில் கிரகங்கள் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கிறதோ அதே பாதையில் நவகிரகங்களும் இந்த சூரியனார் கோயிலில் அமைந்திருக்கின்றன. 9 கிரகங்களும் தங்களுக்குரிய ஆயுதங்கள், வாகனங்கள் என்று எதுவுமின்றி, அமைதியும், புன்முறுவல் தவழும் முகமுமாக அனுக்ரஹ மூர்த்திகளாகக் காட்சி தருவது மிகவும் சிறப்பானது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான கோயிலில் சூரியனுக்கு உரிய ஆலயத்தைக் கட்டியவர், முதலாம் குலோத்துங்க சோழன். மற்ற கிரகங்களுக்குரிய தனிக் கோயில்கள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டன.
இந்த ஆலயத்தில் உள்ள பிள்ளையார், கோள் தீர்த்த விநாயகர். நவகிரகங்களின் சாபமான கோள் நீக்கியவர் என்பதால் இந்தப் பெயர்.
நவகிரக தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது. சூரியனார் கோயில் செல்பவர்கள், அருகில் உள்ள திருமங்கலக்குடி சிவன் கோயிலுக்கும் சென்றால்தான் முழுமையானதாக இருக்கும். ஏனென்றால் நவகிரகங்கள், தங்களின் சாபம் தீர வழிபட்டது திருமங்கலக்குடி பிராணவர தேஸ்வரரையும், மங்கள நாயகியையும்தான். அருமையான, பழமையான ஆலயம் அது. பாடல் பெற்ற தலமும் கூட.
நவகிரக நாயகர்கள் தம்மை வழிபடுபவர்களுக்கு நற்பலன்களை மிகுதியாகவும் தீயபலனை தணிவித்தும் வினைப்பயனை ஊட்டுவார்கள். சிவனடியார்களுக்கு எப்போதும் நல்லவற்றையே செய்வார்கள் என்கிறார் சம்பந்தர்.
`ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.'இதோ, நவகிரக நாயகர்களுக்கு ஏற்பட்ட பிரச்னையையும், அது தீர்ந்த விதத்தையும் காண்போமா?
காலம்இமயமலைச் சாரல்.
முனிவர்கள் எல்லாம் அங்கங்கே தவம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இடமே பக்தி அலையில் தவழ்ந்து கொண்டிருந்தது.சர்வ வல்லமை பெற்ற அந்த முனிவர்கள் குழுவில் நடுநாயகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தார் காலவ மகரிஷி. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற 6 குற்றங்களும் இல்லாதவர் அவர். நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெட்டுப் புராணம், இருபத்தெட்டு ஆகமம், அறுபத்து நான்கு கலைகள், தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆகியவற்றில் கரை கண்டவர்.
அவரிடம் உள்ள மற்றொரு சிறப்பு, மூன்று காலங்களையும் அறியும் பேரறிவு. ஒருவரைப் பார்த்தால் போதும் அவர் எப்படிப்பட்டவர்? எப்படி இருந்தார்? எப்படி இருக்கிறார்? எப்படி இருக்கப் போகிறார்? என்பதை, முகத்தைப் பார்த்தே சொல்லும் அபாரமான சக்தி பெற்றிருந்தார். பல முனிவர்கள் கூட, தங்கள் எதிர்காலத்தைப் பற்றி இவரிடம் தினம் கேட்டுச் செல்வார்கள்.
ஒரு நாள் ஓர் இளம் துறவி, காலவ முனிவரைப் பார்க்க வந்தார். தன் எதிர்காலம் பற்றிக் கூறுமாறு கேட்டார்.
அவரை உற்றுப் பார்த்தார் முனிவர்.
வந்தவர் யார் எனப் புரிந்தது. காலதேவன்!
கையெடுத்துக் கும்பிட்டார் முனிவர். ``காலத்தைப் பற்றி காலதேவனுக்கே நான் சொல்வதா?''
காலதேவன் புன்னகைத்தார். ``ஊருக்கெல்லாம் எதிர்காலத்தைத் துல்லியமாகச் சொல்லும் முனிவரே, உம் எதிர் காலத்தில் நீர் என்ன பாடுபடப் போகிறீர்கள் என்று தெரியுமா?''
காலதேவன் எக்காளச் சிரிப்புடன் காணாமல் போனார்.
நவகிரக நாயகர்கள்
காலவ ரிஷி யோசிக்க ஆரம்பித்தார்.
இதுவரை என் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததே இல்லையே?
போன ஜென்மத்தில் தான் யாராக இருந்தோம்?
கண் முன் காட்சி ஓடிற்று. நண்டுகளின் காலை தினம் தினம் முறித்துத் தின்ற பாவக் காட்சிகள் அதிலே தெரிந்தன.
அதனால்? அதனால்?
காலவ ரிஷி திடுக்கிட்டார். காரணம் முற்பிறவியின் பாவ வினை காரணமாக, இந்தப் பிறவியில் அவரை, பெருநோய் பிடித்து ஆட்டப் போகிறது.
சித்தம் கலங்கினார் ரிஷி.
தோழ முனிவர்கள் ஆறுதல் பகர்ந்தனர். ``காலவரே முக்காலம் உணர்ந்த நீங்கள் கலங்கலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள் நவகிரகங்கள் தானே? நீங்கள் நவகிரகங்களை வழிபட்டு, விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்'' என்றனர்.
காலவரிஷிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வேறு இடம் சென்றார்.
ஒரு நல்ல நாளில் பஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று, நவகிரகங்களை தியானித்துக் கடும்தவம் புரிந்தார்.
தவத்தின் உக்கிரம், நவகிரக மண்டலங்களைத் தாக்கிற்று.
ஜுவாலையின் வெம்மை தாங்காமல் நவநாயகர்களும் ஒருசேர வந்து ரிஷிக்குக் காட்சியளித்தனர்.
பிடி சாபம்
பரவசமடைந்தார் முனிவர். நவகிரகங்களையும் விழுந்து வணங்கினார்.
``முனிவரே, உம் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்?''
``நவமண்டலாதிபர்களே, அடியேனைப் பெரு நோய் பற்றும் அபாயம் உள்ளது. அது அணுகாதபடி வரம் வேண்டும்.''
நவகிரக நாயகர்கள், ஆசி வழங்கி, வரம் தந்து அகன்றார்கள்.
வந்தது வம்பு.
இந்த விஷயம் பிரம்மாவிற்குத் தெரிய வந்தது. ஆத்திரத்துடன் நவகிரகங்களை அழைத்தார்.
``கிரகங்களே, நீங்கள் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள். சிவபெருமான் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளும் தங்களது வினைப்பயனை அடையவே, உங்களை நான் படைத்தேன். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல், காலவ முனிவருக்கு வரம் கொடுத்துள்ளீர்கள். எனவே உங்கள் 9 பேரையும் நான் சபிக்கிறேன். பூலோகத்தில் நீங்கள் பிறந்து, முனிவர் கஷ்டப்பட வேண்டிய கால அளவு வரை, அந்த நோய் உங்களைப் பற்றட்டும்'' என்று சாபமிட்டார் பிரம்மா.
அந்த 78 நாட்கள்
இடி ஒலி கேட்ட பாம்புபோல நவகிரகங்கள் துடித்தனர். ``படைப்புத் தொழிலின் முதல்வரே, எங்களை மன்னிக்க வேண்டும். முனிவரின் தவ ஜுவாலையின் வெம்மை தாங்காமல் வரம் தந்துவிட்டோம். எங்களுக்குச் சாப விமோசனம் தாருங்கள்.'' என்று வணங்கினர்.
பிரம்மா மனமிறங்கினார். ``நீங்கள் பூலோகத்தில் அர்க்கவனம் என்னும் வெள்ளெருக்கங்காட்டை அடையுங்கள். அங்கேயுள்ள பிராண வரதரையும், மங்கள நாயகியையும் வழிபட்டு தவம் செய்யுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை 78 நாட்கள் தவம் புரியுங்கள். எருக்க இலையில் தயிர் சாதத்தைப் படைத்து உண்ணுங்கள். சிவனின் அருளால் சாப விமோசனம் கிட்டும்.''
திருமங்கலக்குடி
சூரியன், குரு, சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய 9 பேரும் அர்க்கவனத்தை அடைந்தார்கள். நோய் வேறு அவர்களைப் பற்றியது.
தவித்துப் போன அவர்கள் விநாயகரை பிரதிஷ்டை செய்து, தங்கள் கோள்களைத் தீர்க்குமாறு வேண்டினர். அவர், கோள் தீர்த்த விநாயகர் ஆனார்.
கடும் நோன்பு இருந்தார்கள். பிரம்மா கூறியபடி தினமும் சிவனை வணங்கினர்.
எருக்க இலையில் தயிர் சாதத்தை வைத்து, பூஜித்து உண்டார்கள். (எருக்க இலையின் சாறுக்கு பெருநோயைத் தீர்க்கும் வலிமை உண்டு என்கிறது சித்த வைத்தியம்!)
79-வது நாள் பிராணவரதரும், மங்களநாயகியும் நவகிரகங்களுக்குக் காட்சி தந்தார்கள்.
அந்த நேரத்தில் அவர்கள் நோயும் முற்றிலும் நீங்கிற்று.
``நவகிரகங்களே, நீங்கள் தங்கி தவம் செய்த இந்த இடத்தில் உங்களுக்கென, தனி ஆலயம் உருவாகி, அது உங்களுக்கு உரிய தலமாக ஆகட்டும். இங்கே உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்ரஹம் செய்யலாம்'' என்று ஆசி கூறினார் சிவன்.சூரியனார் கோயில்
நவகிரக நாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.அப்போது காலவ முனிவரும் அங்கே வந்தார், வணங்கினார்.
தன் பொருட்டு நவகிரகங்களுக்கு ஏற்பட்ட நிலைக்காக வருந்தினார்.
``எல்லாம் நல்லதுக்காகவே. முனிவரே, நீங்கள் எங்களுக்காக இங்கே ஓர் ஆலயத்தை எழுப்புங்கள்'' என்று ஆசி கூறினர்.காலவ முனிவர், நவநாயகர்களின் ஆணைப்படி அமைத்த கோயில்தான் சூரியனார் கோயில். நவகிரகங்களே வழிபட்ட பிராணவரதரும், மங்களநாயகியும் இருக்குமிடம் திருமங்கலக்குடி.
சூரியனார் கோயில் செல்லும் பக்தர்கள் அருகிலுள்ள திருமங்கலக்குடிக்கும் சென்று வழிபட்டு வந்தால் எல்லா நலனும் அடையலாம்.
சூரியனார் கோயில்தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே அமைந்துள்ளது.
கும்பகோணம், மயிலாடுதுறை, ஆடுதுறையிலிருந்தும் பஸ்கள் செல்கின்றன.
அருகில் உள்ள திருமங்கலக்குடி ஆலயத்தையும் கட்டாயம் பார்க்கவேண்டும்.
நவகிரக தோஷம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகார தலம்.

ஐயன் ஐயப்பா

உலகில் மதிப்பு மிக்கது மனித வாழ்க்கைதான். மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நமது சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. அந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் அமைந்திருக்கின்றன. ஐயப்ப சுவாமியின் வாழ்க்கையும் ஐந்து பருவங்களைக் கொண்டது.
பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை `பால்ய பருவம்'. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத்தை விளக்கும் திருத்தலம் குளத்துப்புழா. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பருவம் `யௌவன பருவம்.' இந்தப் பருவத்தை விளக்கும் தலம், ஆரியங்காவு. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை `கிரஹஸ்த பருவம்' அச்சன்கோவில்.
ஐம்பத்தொரு முதல் எண்பத்தைந்து வயது வரை, `வானப்பிரஸ்தம்' - சபரிமலை. எண்பத்தாறு வயது முதல் ஏகாந்த' நிலை - காந்தமலை.இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளை விளக்கும் தனது அவதாரங்களாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ள கோவில்கள், கேரளாவில் உள்ளன.
சிரஞ்சீவியான பரசுராமர் ஐயப்பனுக்காக நான்கு முக்கியக் கோவில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் ஒரே மலைத் தொடரில் அமைந்துள்ளது சிறப்பான விஷயமாகும். ஒரு மனிதனுக்கு அந்தந்த வயதில் பருவத்தில் ஏற்படும் இன்னல்களைப் போக்க அதற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது, இத்தலங்களின் சிறப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
ஐயப்ப சுவாமியின் வாழ்க்கையோடு தொடர்புடைய அந்தத் திருத்தலங்களைப் பற்றி இதோ ஒரு தொகுப்பு.
குளத்துப்புழா : கேரளத்தின் தென்கிழக்குப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கிறது குளத்துப்புழா. பரசுராமரால் உருவான இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்து போய்விட்டது. பின்னர் கொட்டாரக்கரா என்ற பகுதியை ஆண்ட மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோவில். இந்த மன்னன் ஒரு சமயம் இந்த காட்டுப்பகுதிக்கு வந்தபோது, உணவு சமைக்க வேண்டி அவருடன் வந்த பணியாளர்கள், மூன்று கற்களை எடுத்து அடுப்பு தயாரித்தனர். அதில் ஒரு கல் மட்டும் சற்று பெரியதாக இருக்கவே கல்லை உடைத்து சிறிதாக்க எண்ணி, அவர்கள் அங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த பெரிய உருவ அமைப்பு கொண்ட கல் ஒன்றை எடுத்து அக் கல்லின் மீது போட்டு உடைத்தனர். ஆனால் உடைந்தது கல் அல்ல; அவர்கள் எடுத்துப் போட்ட அந்த உருவம் கொண்ட கல்தான். அப்போதுதான் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. உடைபட்ட அந்தக் கல் எட்டுத் துண்டுகளாக சிதறி அதிலிருந்து ரத்தம் கொட்டத் துவங்கியது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் பதறிப் போயினர்.
பிரஸ்னம் எனப்படும் கேரள ஜோதிட முறை மூலம் இதற்கான காரணம் தெரியவந்தது. உடைபட்ட அந்தக் கல் ஐயப்பன் விக்ரகம் என்றும்; அந்த இடத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் ஒன்று இருந்தது என்றும் தெரிய வந்தது. மிகப் பெரிய தீங்கை இழைத்து விட்டோமே என்று மன்னர் வருந்த, அதற்குப் பரிகாரமாக அதே இடத்தில் கோவில் ஒன்றை நிறுவினால் போதும் என்று நம்பூதிரிகள் சொல்ல, அதன்படி மன்னர் கட்டிய கோவில்தான் இப்போது இருக்கிறது.
பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டுத் துண்டாக உடைபட்ட அந்தக் கற்சிலையும் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது. அவை பூஜை நேரங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, பூஜை முடிந்ததும் பழையபடி எட்டுத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவதும் தற்போது வழக்கமாக இருக்கிறது. குளத்துப்புழா கோவிலுக்கு அருகில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது கல்லடையாறு. இந்த ஆற்றிற்கும் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஆற்றில் சில மீன்கள் உண்டு. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மீன்களுக்கு பொரி போடுவது ஒருவித வழிபாடாகவே இருக்கிறது. இங்குள்ள மீன்கள் மச்சகன்னி எனப்படும் கடல் கன்னியின் வழி வந்தவைகளாகும். புராண காலத்தில் மச்சக்கன்னி இங்குள்ள பாலகன் ஐயப்பன் மீது மையல் கொண்டு அவனையே மணம் முடிப்பேன் என்று பிடிவாதமாக இங்கு வந்தாளாம். அவளை மணம் முடிக்க மறுத்து விட்ட ஐயப்பன், பின்னர் அவளது வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கல்லடை ஆற்றிலேயே இருந்து கொள்ள அனுமதி அளித்தார். மச்சக் கன்னி தனது தோழிகளுடன் மீன்களாக இந்த ஆற்றில் இருக்கிறாள் என்பது ஐதிகம். தோல் நோய் உள்ளவர்கள் இங்குள்ள மீன்களுக்கு உணவிட்டால் நோய் தீரும் என்பது ஐதிகம். இங்குள்ள மீன்கள் ஆற்றில் எவ்வளவுதான் வெள்ளம் வந்தாலும் இந்தப் பகுதியை விட்டுச் செல்வதேயில்லை என்பது இன்னமும் நீடிக்கும் அதிசயம்தான்.
இந்தக் கோவிலின் வலது பிராகாரத்தில் யக்ஷியம்மா என்ற அம்மன் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு தொட்டில் கட்டி இந்த அம்மனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதே போல நாகராஜாவுக்காக திறந்த வெளிக் கோவில் ஒன்றும் கோவிலின் வலது புறம் அமைந்துள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தோஷம் தீரும் என்பது ஐதிகம். கோவிலைச் சுற்றி விநாயகர், மாம்பழத்துறை அம்மன், பூதத்தார் போன்ற தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோவில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
குளத்துப்புழா கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து எளிதில் சென்று வர முடியும். நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது இக்கோவில். திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் தான் இருக்கிறது குளத்துப்புழா.
ஆரியங்காவு: பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம், ஆரியங்காவுதான். இந்தக் கோவிலில் ஐயப்பன், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன், மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சி தருகிறார். பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு எப்படித் திருமணம் நடந்தது? யோக நிலை மேற்கொண்ட மணிகண்ட அவதாரத்தில், அவருக்குத் திருமணம் நடக்கவில்லை. வேறொரு அவதாரத்தில் சாஸ்தாவுக்கு திருமணம் நடந்ததாக சில புராணங்களில் குறிப்புகள் உள்ளது. அந்தக் காலத்தில் பட்டு ஆடைகள் அணிவதே புனிதமானது என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவர் திருவாங்கூர் மன்னருக்காக பட்டாடைகளைத் தயாரித்து அதை அவரிடம் கொடுக்க வேண்டி திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கூடவே தனது மகளான புஷ்கலாவையும் அழைத்துச் சென்றிருந்தார். செல்லும் வழியில் ஆரியங்காவு வந்தபோது இருட்டி விட்டதால் அங்கே உள்ள கோவிலிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் புறப்படும் போது புஷ்கலா தனது தந்தையிடம், அப்பா, நான் வரவில்லை. எனக்கு இங்கே உள்ள சுவாமியை தரிசனம் செய்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. எனவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் மன்னரைச் சந்தித்து உங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது உங்களுடன் வருகிறேன் என்று சொல்ல, வணிகர், கோவிலின் மேல்சாந்தி (அர்ச்சகர்)யிடம் மகளை ஒப்படைத்துவிட்டு, திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார்.
செல்லும் வழியில் அடர்ந்த காட்டில் ஒரு மத யானையிடம் அவர் மாட்டிக் கொண்டார். காப்பாற்றும்படி ஐயப்பனிடம் மனமுருக வேண்டினார். சிறிது நேரத்தில் ஒரு வேடன் அங்கே வந்து அந்த யானையை சைகை மூலமே அடக்கி விரட்டினான். தன் உயிரைக் காத்த அந்த இளைஞனுக்கு தன் கையில் இருந்த பட்டாடையை கொடுத்தார் அந்த வணிகர். பட்டாடையில் கம்பீரமாக ஜொலித்த அந்த இளைஞனைக் கண்டு வியந்த அந்த வணிகர், ``மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய், உனக்கு என்ன வேண்டுமோ கேள்...'' என்று சொன்னார்.
``உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும்..'' என்று அந்த இளைஞன் கேட்க, எனக்கு ஒரு மகள் இருப்பது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வியப்புடன், ``சரி, அப்படியே செய்கிறேன்'' என்று உறுதியளித்தார். ``நாளை ஆரியங்காவு கோவிலில் என்னை சந்திக்கலாம்'' என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான். மறுநாள் கோவிலுக்கு வந்த வணிகர், அங்கு தனது மகளைச் சந்திக்க முயன்றபோது அவள் எங்கும் இல்லை. இரவு முழுக்க தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கோவில் நம்பூதிரியின்கனவில் வந்த ஐயப்பன் தன் மீது புஷ்கலா கொண்ட பக்தியின் காரணமாக அவளை தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.நம்பூதிரி, வணிகரிடம் விஷயத்தைச் சொல்ல, அதே சமயம் திருவாங்கூர் மன்னரும் ஆரியங்காவுக்கு வந்து சேர்ந்தார்.
மறுநாள் கோவில் நடை திறந்தபோது, ஐயன் வேடன் ரூபத்தில் வணிகர் கொடுத்த பட்டாடையுடன் காட்சி கொடுக்க அதைக்கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். இந்த வைபவம் இத் தலத்தில் ஆண்டுதோறும் மார்கழி 9ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் திருக்கல்யாண வைபவமாக நடக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களையும் கொண்ட வகையில் விருந்து உட்பட நடக்கும்.
ஆரியங்காவுக்குச் செல்ல நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை வழியான மார்க்கம் எளிதானது. தென்காசியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வருபவர்கள் குளத்துப்புழா வழியாக வரலாம்.
அச்சன்கோவில்: அச்சன்கோவில் அரசன், ஐயப்பன். இத்தலம் கேரளாவில் இருந்தாலும், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்ரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கப்பட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டுப் படிகள் காணப்படுகிறது. இகக்கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார். இக்கோவிலின் சிறப்பு, ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாகும். அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
இங்குள்ள சுவாமி தீர்த்தம் பாம்புகடிக்கு அருமருந்தாகும். இத்தலத்தைச் சுற்றி பாம்பு கடித்து இறந்தவர்கள் யாரும் இல்லையாம். ஐயன் விக்ரகத்தின் முன் தினமும் தீர்த்தம் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கேனும் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் நடை திறக்கப்பட்டு இந்தத் தீர்த்தம் கடிபட்டவருக்குக் கொடுக்கப்படுகிறது. அதன்பின் அவர் எந்த பாதிப்பும் இன்றி குணமடைவது இன்றும் கண்கூடாகும்.இத்தலத்தில் மார்கழி மாதம் முதல்தேதி கொடியேற்றம் நடக்கும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் ஒன்பதாம் நாள், தேர்த்திருவிழா நடக்கும். கேரள மாநிலத்தில் தேர்த்திருவிழா நடக்கும் கோவில்கள் இரண்டில் இது ஒன்று. (இன்னொரு கோவில் பாலக்காடு அருகில் உள்ள கல்பாத்தி என்ற தலமாகும்.)
இக்கோவில் சிதிலமடைந்து புனரமைப்பு செய்த தினம் தைமாதம் ரேவதி நட்சத்திர தினமாகும். ஆதலால் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று இங்கு புஷ்பாஞ்சலி என்ற வைபவம் நடக்கும். கோடி கோடியாக மலர்களைக் கொட்டி ஐயப்பன் அலங்கரிக்கப்படும் அழகே அழகு.
தென்காசியிலிருந்து சுமார் 35 கி.மீ. தூரம் மலைப்பாதையில் சென்றால், அச்சன்கோவிலை அடையலாம். ஓரளவு பஸ் வசதி உண்டு என்ற போதிலும் கார், வேனில் சென்று வருவது நல்லது.
சபரிமலை: சிவபெருமானிடம் வரம் கேட்ட பஸ்மாசுரன் அதை சோதிக்க அவர் தலையிலேயே கைவைக்க முயன்றபோது, திருமால் மோகினி வடிவில் வந்து அவனை அழித்தார். அதன் பின்னர், மோகினியான திருமால் மூலம் சிவபெருமான் உருவாக்கிய குழந்தைதான் ஐயப்பன்.இந்தக் குழந்தை திருமாலின் கையிலிருந்து பிறந்தது என்றும், அதனால் கைஅப்பன் என்றுதான் அக்குழந்தையை அழைத்து வந்தனர் என்றும் அப்பெயரே மருவி ஐயப்பன் என்றானது என்றும் ஒரு கதை உண்டு. முனிவர் ஒருவரின் மனைவி ஒரு சாபத்தினால் மகிஷியாகி விடுகிறாள். அவள் பிரம்மனிடம் தனக்கு என்றுமே சாகாத வரம் வேண்டும் என்று கேட்க பிரம்மன் அது இயலாது என்று சொல்ல, அப்படியானால் ஆணுக்கும் ஆணுக்கும் ஒரு குழந்தை பிறந்து, அது பதினான்கு ஆண்டுகள் மானுட வாழ்க்கை வாழ்ந்தால் அதன் மூலம் மட்டுமே தனக்குமரணம் நிகழ வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் அவ்வாறே வரமளித்தார். அந்த மகிஷியை வதம் பண்ணும் பொருட்டே ஐயப்பன் மணிகண்டனாக இப்புவியில் அவதரித்தார்.
சாஸ்தா புவியில் நேபாள மன்னன் பலிஞன் என்பவரது மகள் புஷ்கலையை திருமணம் செய்து கொண்டார். அதே போல் வஞ்சி தேசத்தை ஆண்ட பிஞ்சகன் மகளான பூரணையையும் திருமணம் செய்து கொள்ள நேரிட்டது. தன் மகளைத் தவிர இன்னொரு பெண்ணையும் சாஸ்தா மணம் செய்து கொண்டது பலிஞ மன்னனை கோபமடையச் செய்தது. இதனால் அவர் சாஸ்தாவை நோக்கி நீ பூலோகத்தில் பிரம்மச்சாரியாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். சாஸ்தாவும் அதை வரமாக ஏற்றுக் கொண்டு, அப்படி நான் பிறக்கும் பட்சத்தில் நீங்களே என் தந்தையாக இருக்க வேண்டும் என்று சொல்ல, அவ்வாறே நடந்தது. அந்தத் தந்தைதான் பந்தள மகாராஜா.
மானிட பாலகனாக பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்து அவதார நோக்கமான மகிஷியை வதம் செய்தான் மணிகண்டன். கானகத்தில் புலிப்பால் சேகரிக்கச் சென்ற ஐயப்பன் புலிகளாக மாறிய இந்திரன் மற்றும் தேவர்களுடன் நாடு திரும்பியதும் மணிகண்டன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்பது ஊர்ஜிதமாயிற்று. பூவுலகில் தனது அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் தந்தையான பந்தள மன்னனிடம் ஐயப்பன் சொல்ல, அவர் ஐயப்பனுக்கு கோவில் கட்ட விருப்பம் தெரிவித்தார். உடனே மணிகண்டன், ஓர் அம்பை எய்து, அந்த அம்பு விழுந்த இடத்தில் கோவில் கட்டுமாறு சொல்ல, அதன்படியே நடந்தது. அதுவே தற்போது இருக்கும் சபரிமலை ஐயப்பன் ஆலயம்.
ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியே பின்னர் மஞ்சள் மாதாவானாள். இவள் ஐயப்பனிடம் தன்னைச் திருமணம் செய்து கொள்ளுமாறுகேட்க, ஐயப்பனோ அதைமறுத்து இருமுடிகட்டி இங்கு என்னை முதன் முதலில் காண வரும் பக்தர்கள் (கன்னி சாமிகள்) சரம் குத்தி வருவர். அவ்வாறு கன்னிசாமிகள் எந்த ஆண்டு வராமல் இருப்பார்களோ அந்த ஆண்டில் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இதனால் தான், சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகள் மலையில் சபரிபீடத்தில் சரங்களை குத்திச் செல்வதும், அதை ஆண்டுதோறும் வந்து மாளிகைப்புரம் அம்மன் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்வதும் இன்றும் தொடர்ந்து வரும் வைபவம் ஆகும். இதனால் கோபமடைந்த அம்மன் பத்ரகாளியாக மாறி மாளிகைப்புரத்திற்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள். கன்னி ஐயப்பன்மார்களை அவள் சபித்துக் கொண்டிருக்க, அவளது சாபம் தங்களை அண்டாது இருக்க அவள் கோவிலைச் சுற்றி தேங்காயை உருட்டிச் செல்வது வழக்கமாகி விட்டஒன்றாகும்.
ஐயப்ப பக்தர்கள் வழியில் வழிபடும் இன்னொரு தெய்வம் வாவர். இஸ்லாமியரான இவர் ஒரு முறை ராஜசேகர மன்னரிடம் போரிட வந்தபோது, ஐயப்பன் தனியாக நின்று போரிட்டு வாவரை வென்றார். அதன்பின் அவரை தண்டிக்காமல் நீதி உபதேசங்கள் செய்யவே, வாவர் மனம் திருந்தி ஐயப்பனுக்கு உற்ற நண்பனாகிவிடுகிறார்.
அதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஆலயம் எழுப்பும்போது வாவருக்கும் அங்கு இடமளிக்கப்பட்டது. சன்னிதானத்தின் நேரெதிரே வாவருக்கும் ஒரு சன்னதி உண்டு. இது தவிர எருமேலி என்ற இடத்தில் வாவருக்கு தனியாக ஒரு பெரிய பள்ளிவாசலே உண்டு. இங்குதான் ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் என்ற நிகழ்ச்சியை மேற்கொள்கின்றனர். உதயணன் என்ற கொள்ளைக்காரனை வதம் செய்ய ஐயப்பன் மாறுவேடத்தில் சென்றார். இந்த வைபவமே பேட்டைதுள்ளல் என்று அழைக்கப்படுகிறது. மகிஷியை வதம் செய்தபின் அவளது மரணத்தை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடியதுதான் பேட்டை துள்ளல் என்றும் சொல்கிறார்கள்.
மகிஷியை வதம் செய்யச் சென்ற ஐயப்பன் எருமேலி அருகில் உள்ள புத்தன்வீடு என்ற பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்கினார். ஒரு சாபத்தால், தான் முதுமை நிலையை அடைந்ததாகவும், தன் சாபம் நீங்க அருள வேண்டும் என்றும் அவள் வேண்ட, அவ்வாறே ஐயப்பன் அருள் புரிந்தார். சபரி என்ற அந்த மூதாட்டி, எந்த மலையில் எனது சாபம் நீங்கியதோ அந்த மலை எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்ட, அதன்படியே ஐயப்பன் வரமளித்தார். பின்னர் அம் மங்கை ஐயப்பனை பதினெட்டு முறை வலம் வந்து வணங்கிவிட்டுச் சென்றாள். இந்த ஸித்திகளே பதினெட்டு படிகளாயின என்றும் ஒரு புராணக் கதை உண்டு.
சத்யமான பொன்னு பதினெட்டுப்படிகள் ஏறி நித்யமான தர்மஸ்வரூபன் ஐயன் ஐயப்பனின் பாதம் பணிந்து சொல்லுங்கள் `சுவாமியே சரணம் ஐயப்பா!'

செவ்வாய், 11 நவம்பர், 2008

Thiruvanamalai

“பிறந்தால் சிதம்பரத்தில் பிறக்க வேண்டும்,
வாழ்ந்தால் ஆருரில் வாழவேண்டும்,
இறந்தால் காசியில் இறக்கவேண்டும்.
இவை மூன்றிற்கும் சாத்தியமில்லை என்பதால்அண்ணாமலையாரை நினைக்க வேண்டும்”

ஞானக் கதைகள்



என்ன சொன்னார் பரமசிவன்?
கங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும் தொட்டவாறுஅழகாக ஓடிக்கொண்டிருந்தது.ரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன் தன் தேவியுடன்பேசிவாறு நடந்து கொண்டிருந்தார். நதியின் அழகில் மயங்கிய பார்வதிதேவி, தன் அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார்."நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன?""உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான். அதனாலதான் இந்தநதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன். இந்த நதியில் குளித்தால்செய்த பாவங்கள் போகும்""பாவங்கள் போனால் என்ன ஆகும்?" என்று தேவி ஒன்றும் அறியாதவர்போலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார்."பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்""அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள் அத்தனை பேரும்சொர்க்கத்திற்கு வருவார்களா?""அத்தனை பேரும் வரமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்""முரண்பாடாக இருக்கிறதே நாதா! இதில் குளித்தால் பாவம் போகும் என்றால்.குளித்த அத்தனை பேருக்கும் பாவங்கள் போக வேண்டும். போன அத்தனைபேர்களும் சொர்க்கத்திற்கு வரவேண்டுமல்லவா? சிலர் என்பது ஏன்? சற்றுவிளக்கமாகச் சொல்லுங்களேன்""ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும் ஒரு சிறு நாடகம்நடத்த வேண்டும். ஒரு நொடியில் நான் வயோதிகம் அடைந்த தள்ளாதமுதியவனாகவும், நீ அந்த முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும்.மாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம் காசி நகரில் இருப்போம். அங்கேநான் இறந்ததுபோல பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில் கிடத்திக்கொண்டு நீ அழுது குரல் கொடுக்க வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்!நாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத் தகுந்த விடை கிடைக்கும்""அப்படியே ஆகட்டும் நாதா!"+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++காசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம். படித்துறையின் அருகேமக்கள் கூடும் இடம்கிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார்.தேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து அழுதுகண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது.கூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் விவரித்தார்."என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண வந்த இடத்தில்இப்படி இறந்து விட்டார். அவருக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும்!""அதற்கு ஏன் விசனம்? ஆளுக்கு ஒரு காசு தருகிறோம். இங்கேநிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட ஐம்பதுகாசு சேர்ந்துவிடும்.கவலைப் படாதீர்கள் தாயே!" என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்தமற்றவர்களும் ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள்."பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்?" என்று பாட்டி வேடத்தில்இருந்த தேவியார் தொடர்ந்து கேட்க, கூட்டத்தில் இருந்தவர்களில் நான்குஅல்லது ஐந்து பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள்உடனே பாட்டி சொன்னார்," இவர் பெரிய ரிஷி. இவருக்குக் கொள்ளிவைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும். ஆகவேஉங்களில் யார் பாவம் எதுவும் செய்யாதவரோ அவரே முன் வருக!"உடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,"அதெப்படித்தாயே, மனிதர்களில் பாவம் செய்யாத மனிதன் எங்கே இருப்பான்?தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான்.ஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும் அதுபாவம்தானே? அதனால் பாவம் செய்திருக்காத மனிதன் கிடைப்பதுஅரிதம்மா!"அடுத்து ஒருவன் கேட்டான்,"பாவம் செய்திருப்பதை அறியாமல் அல்லதுஉணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால் என்ன ஆகும்?"அதற்குத் தேவி பதில் சொன்னார்:"அவன் தலை வெடித்துவிடும்!"அவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஆனால்நேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. காலைபதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி வரைக்கும் நீடித்ததுமூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அங்கேவந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை அறிந்து கொண்டவன்தேவியின் அருகில் வந்து சொன்னான்:"பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி!""நிபந்தனை தெரியுமா உனக்கு?""பாவம் எதுவும் செய்திருக்கக்கூடாது.அவ்வளவுதானே? அறியாமல் பாவம்செய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது ""எப்படி?""இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய் சொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன்மீது நம்பிக்கை இருக்கிறது! இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்" என்றுசொன்னவன், "ஓம் நமச்சிவாயா!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு கங்கையில் குதித்தான்.குதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து கரைக்கு ஓடிவந்தான்.அங்கே கரையில் யாரும் இல்லை!=====================================கைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்."இவன்தான் வருவான்!எவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான்.மற்றவர்கள் வரமாட்டார்கள்!"++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்றுநீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககையுடன் அதில் குளியுங்கள்.இறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக்காக்கும்.வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்விகேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்பஇந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.கையில் ரேசன் கார்டு அல்லது அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம்அல்லது விசா. மனதில் கவலை. மனைவியிடம் வாங்கிய திட்டு.உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோஅல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!உய்வே கிடையாது.வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!