உலகில் மதிப்பு மிக்கது மனித வாழ்க்கைதான். மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நமது சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. அந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் அமைந்திருக்கின்றன. ஐயப்ப சுவாமியின் வாழ்க்கையும் ஐந்து பருவங்களைக் கொண்டது.
பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை `பால்ய பருவம்'. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத்தை விளக்கும் திருத்தலம் குளத்துப்புழா. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பருவம் `யௌவன பருவம்.' இந்தப் பருவத்தை விளக்கும் தலம், ஆரியங்காவு. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை `கிரஹஸ்த பருவம்' அச்சன்கோவில்.
ஐம்பத்தொரு முதல் எண்பத்தைந்து வயது வரை, `வானப்பிரஸ்தம்' - சபரிமலை. எண்பத்தாறு வயது முதல் ஏகாந்த' நிலை - காந்தமலை.இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளை விளக்கும் தனது அவதாரங்களாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ள கோவில்கள், கேரளாவில் உள்ளன.
சிரஞ்சீவியான பரசுராமர் ஐயப்பனுக்காக நான்கு முக்கியக் கோவில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் ஒரே மலைத் தொடரில் அமைந்துள்ளது சிறப்பான விஷயமாகும். ஒரு மனிதனுக்கு அந்தந்த வயதில் பருவத்தில் ஏற்படும் இன்னல்களைப் போக்க அதற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது, இத்தலங்களின் சிறப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
ஐயப்ப சுவாமியின் வாழ்க்கையோடு தொடர்புடைய அந்தத் திருத்தலங்களைப் பற்றி இதோ ஒரு தொகுப்பு.
குளத்துப்புழா : கேரளத்தின் தென்கிழக்குப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கிறது குளத்துப்புழா. பரசுராமரால் உருவான இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்து போய்விட்டது. பின்னர் கொட்டாரக்கரா என்ற பகுதியை ஆண்ட மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோவில். இந்த மன்னன் ஒரு சமயம் இந்த காட்டுப்பகுதிக்கு வந்தபோது, உணவு சமைக்க வேண்டி அவருடன் வந்த பணியாளர்கள், மூன்று கற்களை எடுத்து அடுப்பு தயாரித்தனர். அதில் ஒரு கல் மட்டும் சற்று பெரியதாக இருக்கவே கல்லை உடைத்து சிறிதாக்க எண்ணி, அவர்கள் அங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த பெரிய உருவ அமைப்பு கொண்ட கல் ஒன்றை எடுத்து அக் கல்லின் மீது போட்டு உடைத்தனர். ஆனால் உடைந்தது கல் அல்ல; அவர்கள் எடுத்துப் போட்ட அந்த உருவம் கொண்ட கல்தான். அப்போதுதான் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. உடைபட்ட அந்தக் கல் எட்டுத் துண்டுகளாக சிதறி அதிலிருந்து ரத்தம் கொட்டத் துவங்கியது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் பதறிப் போயினர்.
பிரஸ்னம் எனப்படும் கேரள ஜோதிட முறை மூலம் இதற்கான காரணம் தெரியவந்தது. உடைபட்ட அந்தக் கல் ஐயப்பன் விக்ரகம் என்றும்; அந்த இடத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் ஒன்று இருந்தது என்றும் தெரிய வந்தது. மிகப் பெரிய தீங்கை இழைத்து விட்டோமே என்று மன்னர் வருந்த, அதற்குப் பரிகாரமாக அதே இடத்தில் கோவில் ஒன்றை நிறுவினால் போதும் என்று நம்பூதிரிகள் சொல்ல, அதன்படி மன்னர் கட்டிய கோவில்தான் இப்போது இருக்கிறது.
பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டுத் துண்டாக உடைபட்ட அந்தக் கற்சிலையும் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது. அவை பூஜை நேரங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, பூஜை முடிந்ததும் பழையபடி எட்டுத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவதும் தற்போது வழக்கமாக இருக்கிறது. குளத்துப்புழா கோவிலுக்கு அருகில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது கல்லடையாறு. இந்த ஆற்றிற்கும் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஆற்றில் சில மீன்கள் உண்டு. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மீன்களுக்கு பொரி போடுவது ஒருவித வழிபாடாகவே இருக்கிறது. இங்குள்ள மீன்கள் மச்சகன்னி எனப்படும் கடல் கன்னியின் வழி வந்தவைகளாகும். புராண காலத்தில் மச்சக்கன்னி இங்குள்ள பாலகன் ஐயப்பன் மீது மையல் கொண்டு அவனையே மணம் முடிப்பேன் என்று பிடிவாதமாக இங்கு வந்தாளாம். அவளை மணம் முடிக்க மறுத்து விட்ட ஐயப்பன், பின்னர் அவளது வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கல்லடை ஆற்றிலேயே இருந்து கொள்ள அனுமதி அளித்தார். மச்சக் கன்னி தனது தோழிகளுடன் மீன்களாக இந்த ஆற்றில் இருக்கிறாள் என்பது ஐதிகம். தோல் நோய் உள்ளவர்கள் இங்குள்ள மீன்களுக்கு உணவிட்டால் நோய் தீரும் என்பது ஐதிகம். இங்குள்ள மீன்கள் ஆற்றில் எவ்வளவுதான் வெள்ளம் வந்தாலும் இந்தப் பகுதியை விட்டுச் செல்வதேயில்லை என்பது இன்னமும் நீடிக்கும் அதிசயம்தான்.
இந்தக் கோவிலின் வலது பிராகாரத்தில் யக்ஷியம்மா என்ற அம்மன் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு தொட்டில் கட்டி இந்த அம்மனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதே போல நாகராஜாவுக்காக திறந்த வெளிக் கோவில் ஒன்றும் கோவிலின் வலது புறம் அமைந்துள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தோஷம் தீரும் என்பது ஐதிகம். கோவிலைச் சுற்றி விநாயகர், மாம்பழத்துறை அம்மன், பூதத்தார் போன்ற தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோவில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
குளத்துப்புழா கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து எளிதில் சென்று வர முடியும். நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது இக்கோவில். திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் தான் இருக்கிறது குளத்துப்புழா.
ஆரியங்காவு: பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம், ஆரியங்காவுதான். இந்தக் கோவிலில் ஐயப்பன், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன், மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சி தருகிறார். பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு எப்படித் திருமணம் நடந்தது? யோக நிலை மேற்கொண்ட மணிகண்ட அவதாரத்தில், அவருக்குத் திருமணம் நடக்கவில்லை. வேறொரு அவதாரத்தில் சாஸ்தாவுக்கு திருமணம் நடந்ததாக சில புராணங்களில் குறிப்புகள் உள்ளது. அந்தக் காலத்தில் பட்டு ஆடைகள் அணிவதே புனிதமானது என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவர் திருவாங்கூர் மன்னருக்காக பட்டாடைகளைத் தயாரித்து அதை அவரிடம் கொடுக்க வேண்டி திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கூடவே தனது மகளான புஷ்கலாவையும் அழைத்துச் சென்றிருந்தார். செல்லும் வழியில் ஆரியங்காவு வந்தபோது இருட்டி விட்டதால் அங்கே உள்ள கோவிலிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் புறப்படும் போது புஷ்கலா தனது தந்தையிடம், அப்பா, நான் வரவில்லை. எனக்கு இங்கே உள்ள சுவாமியை தரிசனம் செய்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. எனவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் மன்னரைச் சந்தித்து உங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது உங்களுடன் வருகிறேன் என்று சொல்ல, வணிகர், கோவிலின் மேல்சாந்தி (அர்ச்சகர்)யிடம் மகளை ஒப்படைத்துவிட்டு, திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார்.
செல்லும் வழியில் அடர்ந்த காட்டில் ஒரு மத யானையிடம் அவர் மாட்டிக் கொண்டார். காப்பாற்றும்படி ஐயப்பனிடம் மனமுருக வேண்டினார். சிறிது நேரத்தில் ஒரு வேடன் அங்கே வந்து அந்த யானையை சைகை மூலமே அடக்கி விரட்டினான். தன் உயிரைக் காத்த அந்த இளைஞனுக்கு தன் கையில் இருந்த பட்டாடையை கொடுத்தார் அந்த வணிகர். பட்டாடையில் கம்பீரமாக ஜொலித்த அந்த இளைஞனைக் கண்டு வியந்த அந்த வணிகர், ``மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய், உனக்கு என்ன வேண்டுமோ கேள்...'' என்று சொன்னார்.
``உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும்..'' என்று அந்த இளைஞன் கேட்க, எனக்கு ஒரு மகள் இருப்பது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வியப்புடன், ``சரி, அப்படியே செய்கிறேன்'' என்று உறுதியளித்தார். ``நாளை ஆரியங்காவு கோவிலில் என்னை சந்திக்கலாம்'' என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான். மறுநாள் கோவிலுக்கு வந்த வணிகர், அங்கு தனது மகளைச் சந்திக்க முயன்றபோது அவள் எங்கும் இல்லை. இரவு முழுக்க தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கோவில் நம்பூதிரியின்கனவில் வந்த ஐயப்பன் தன் மீது புஷ்கலா கொண்ட பக்தியின் காரணமாக அவளை தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.நம்பூதிரி, வணிகரிடம் விஷயத்தைச் சொல்ல, அதே சமயம் திருவாங்கூர் மன்னரும் ஆரியங்காவுக்கு வந்து சேர்ந்தார்.
மறுநாள் கோவில் நடை திறந்தபோது, ஐயன் வேடன் ரூபத்தில் வணிகர் கொடுத்த பட்டாடையுடன் காட்சி கொடுக்க அதைக்கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். இந்த வைபவம் இத் தலத்தில் ஆண்டுதோறும் மார்கழி 9ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் திருக்கல்யாண வைபவமாக நடக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களையும் கொண்ட வகையில் விருந்து உட்பட நடக்கும்.
ஆரியங்காவுக்குச் செல்ல நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை வழியான மார்க்கம் எளிதானது. தென்காசியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வருபவர்கள் குளத்துப்புழா வழியாக வரலாம்.
அச்சன்கோவில்: அச்சன்கோவில் அரசன், ஐயப்பன். இத்தலம் கேரளாவில் இருந்தாலும், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்ரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கப்பட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டுப் படிகள் காணப்படுகிறது. இகக்கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார். இக்கோவிலின் சிறப்பு, ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாகும். அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
இங்குள்ள சுவாமி தீர்த்தம் பாம்புகடிக்கு அருமருந்தாகும். இத்தலத்தைச் சுற்றி பாம்பு கடித்து இறந்தவர்கள் யாரும் இல்லையாம். ஐயன் விக்ரகத்தின் முன் தினமும் தீர்த்தம் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கேனும் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் நடை திறக்கப்பட்டு இந்தத் தீர்த்தம் கடிபட்டவருக்குக் கொடுக்கப்படுகிறது. அதன்பின் அவர் எந்த பாதிப்பும் இன்றி குணமடைவது இன்றும் கண்கூடாகும்.இத்தலத்தில் மார்கழி மாதம் முதல்தேதி கொடியேற்றம் நடக்கும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் ஒன்பதாம் நாள், தேர்த்திருவிழா நடக்கும். கேரள மாநிலத்தில் தேர்த்திருவிழா நடக்கும் கோவில்கள் இரண்டில் இது ஒன்று. (இன்னொரு கோவில் பாலக்காடு அருகில் உள்ள கல்பாத்தி என்ற தலமாகும்.)
இக்கோவில் சிதிலமடைந்து புனரமைப்பு செய்த தினம் தைமாதம் ரேவதி நட்சத்திர தினமாகும். ஆதலால் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று இங்கு புஷ்பாஞ்சலி என்ற வைபவம் நடக்கும். கோடி கோடியாக மலர்களைக் கொட்டி ஐயப்பன் அலங்கரிக்கப்படும் அழகே அழகு.
தென்காசியிலிருந்து சுமார் 35 கி.மீ. தூரம் மலைப்பாதையில் சென்றால், அச்சன்கோவிலை அடையலாம். ஓரளவு பஸ் வசதி உண்டு என்ற போதிலும் கார், வேனில் சென்று வருவது நல்லது.
சபரிமலை: சிவபெருமானிடம் வரம் கேட்ட பஸ்மாசுரன் அதை சோதிக்க அவர் தலையிலேயே கைவைக்க முயன்றபோது, திருமால் மோகினி வடிவில் வந்து அவனை அழித்தார். அதன் பின்னர், மோகினியான திருமால் மூலம் சிவபெருமான் உருவாக்கிய குழந்தைதான் ஐயப்பன்.இந்தக் குழந்தை திருமாலின் கையிலிருந்து பிறந்தது என்றும், அதனால் கைஅப்பன் என்றுதான் அக்குழந்தையை அழைத்து வந்தனர் என்றும் அப்பெயரே மருவி ஐயப்பன் என்றானது என்றும் ஒரு கதை உண்டு. முனிவர் ஒருவரின் மனைவி ஒரு சாபத்தினால் மகிஷியாகி விடுகிறாள். அவள் பிரம்மனிடம் தனக்கு என்றுமே சாகாத வரம் வேண்டும் என்று கேட்க பிரம்மன் அது இயலாது என்று சொல்ல, அப்படியானால் ஆணுக்கும் ஆணுக்கும் ஒரு குழந்தை பிறந்து, அது பதினான்கு ஆண்டுகள் மானுட வாழ்க்கை வாழ்ந்தால் அதன் மூலம் மட்டுமே தனக்குமரணம் நிகழ வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் அவ்வாறே வரமளித்தார். அந்த மகிஷியை வதம் பண்ணும் பொருட்டே ஐயப்பன் மணிகண்டனாக இப்புவியில் அவதரித்தார்.
சாஸ்தா புவியில் நேபாள மன்னன் பலிஞன் என்பவரது மகள் புஷ்கலையை திருமணம் செய்து கொண்டார். அதே போல் வஞ்சி தேசத்தை ஆண்ட பிஞ்சகன் மகளான பூரணையையும் திருமணம் செய்து கொள்ள நேரிட்டது. தன் மகளைத் தவிர இன்னொரு பெண்ணையும் சாஸ்தா மணம் செய்து கொண்டது பலிஞ மன்னனை கோபமடையச் செய்தது. இதனால் அவர் சாஸ்தாவை நோக்கி நீ பூலோகத்தில் பிரம்மச்சாரியாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். சாஸ்தாவும் அதை வரமாக ஏற்றுக் கொண்டு, அப்படி நான் பிறக்கும் பட்சத்தில் நீங்களே என் தந்தையாக இருக்க வேண்டும் என்று சொல்ல, அவ்வாறே நடந்தது. அந்தத் தந்தைதான் பந்தள மகாராஜா.
மானிட பாலகனாக பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்து அவதார நோக்கமான மகிஷியை வதம் செய்தான் மணிகண்டன். கானகத்தில் புலிப்பால் சேகரிக்கச் சென்ற ஐயப்பன் புலிகளாக மாறிய இந்திரன் மற்றும் தேவர்களுடன் நாடு திரும்பியதும் மணிகண்டன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்பது ஊர்ஜிதமாயிற்று. பூவுலகில் தனது அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் தந்தையான பந்தள மன்னனிடம் ஐயப்பன் சொல்ல, அவர் ஐயப்பனுக்கு கோவில் கட்ட விருப்பம் தெரிவித்தார். உடனே மணிகண்டன், ஓர் அம்பை எய்து, அந்த அம்பு விழுந்த இடத்தில் கோவில் கட்டுமாறு சொல்ல, அதன்படியே நடந்தது. அதுவே தற்போது இருக்கும் சபரிமலை ஐயப்பன் ஆலயம்.
ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியே பின்னர் மஞ்சள் மாதாவானாள். இவள் ஐயப்பனிடம் தன்னைச் திருமணம் செய்து கொள்ளுமாறுகேட்க, ஐயப்பனோ அதைமறுத்து இருமுடிகட்டி இங்கு என்னை முதன் முதலில் காண வரும் பக்தர்கள் (கன்னி சாமிகள்) சரம் குத்தி வருவர். அவ்வாறு கன்னிசாமிகள் எந்த ஆண்டு வராமல் இருப்பார்களோ அந்த ஆண்டில் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இதனால் தான், சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகள் மலையில் சபரிபீடத்தில் சரங்களை குத்திச் செல்வதும், அதை ஆண்டுதோறும் வந்து மாளிகைப்புரம் அம்மன் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்வதும் இன்றும் தொடர்ந்து வரும் வைபவம் ஆகும். இதனால் கோபமடைந்த அம்மன் பத்ரகாளியாக மாறி மாளிகைப்புரத்திற்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள். கன்னி ஐயப்பன்மார்களை அவள் சபித்துக் கொண்டிருக்க, அவளது சாபம் தங்களை அண்டாது இருக்க அவள் கோவிலைச் சுற்றி தேங்காயை உருட்டிச் செல்வது வழக்கமாகி விட்டஒன்றாகும்.
ஐயப்ப பக்தர்கள் வழியில் வழிபடும் இன்னொரு தெய்வம் வாவர். இஸ்லாமியரான இவர் ஒரு முறை ராஜசேகர மன்னரிடம் போரிட வந்தபோது, ஐயப்பன் தனியாக நின்று போரிட்டு வாவரை வென்றார். அதன்பின் அவரை தண்டிக்காமல் நீதி உபதேசங்கள் செய்யவே, வாவர் மனம் திருந்தி ஐயப்பனுக்கு உற்ற நண்பனாகிவிடுகிறார்.
அதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஆலயம் எழுப்பும்போது வாவருக்கும் அங்கு இடமளிக்கப்பட்டது. சன்னிதானத்தின் நேரெதிரே வாவருக்கும் ஒரு சன்னதி உண்டு. இது தவிர எருமேலி என்ற இடத்தில் வாவருக்கு தனியாக ஒரு பெரிய பள்ளிவாசலே உண்டு. இங்குதான் ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் என்ற நிகழ்ச்சியை மேற்கொள்கின்றனர். உதயணன் என்ற கொள்ளைக்காரனை வதம் செய்ய ஐயப்பன் மாறுவேடத்தில் சென்றார். இந்த வைபவமே பேட்டைதுள்ளல் என்று அழைக்கப்படுகிறது. மகிஷியை வதம் செய்தபின் அவளது மரணத்தை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடியதுதான் பேட்டை துள்ளல் என்றும் சொல்கிறார்கள்.
மகிஷியை வதம் செய்யச் சென்ற ஐயப்பன் எருமேலி அருகில் உள்ள புத்தன்வீடு என்ற பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்கினார். ஒரு சாபத்தால், தான் முதுமை நிலையை அடைந்ததாகவும், தன் சாபம் நீங்க அருள வேண்டும் என்றும் அவள் வேண்ட, அவ்வாறே ஐயப்பன் அருள் புரிந்தார். சபரி என்ற அந்த மூதாட்டி, எந்த மலையில் எனது சாபம் நீங்கியதோ அந்த மலை எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்ட, அதன்படியே ஐயப்பன் வரமளித்தார். பின்னர் அம் மங்கை ஐயப்பனை பதினெட்டு முறை வலம் வந்து வணங்கிவிட்டுச் சென்றாள். இந்த ஸித்திகளே பதினெட்டு படிகளாயின என்றும் ஒரு புராணக் கதை உண்டு.
சத்யமான பொன்னு பதினெட்டுப்படிகள் ஏறி நித்யமான தர்மஸ்வரூபன் ஐயன் ஐயப்பனின் பாதம் பணிந்து சொல்லுங்கள் `சுவாமியே சரணம் ஐயப்பா!'
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக