வெள்ளி, 14 நவம்பர், 2008

நாளைய இந்தியா இவர்களின் கையிலா ?

வருங்கால இந்தியாவின் சிற்பிகளான மாணவர்கள் இந்தியாவை எப்படி எல்லாம் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நேற்று நேரிலும், ஊடகங்களிலும் பார்த்த மக்கள் அதிர்ந்து போய்த்தான் உள்ளனர்.நீதி மன்றத்திலே வாதாடி நீதியை நிலைநாட்டவும், சட்டத்தைக் காக்கவும் , தங்கள கட்சிக் காரரின் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவும் வேண்டி தங்கள் வாதத் திறமையால் நீதிபதிகள் முன்னால் அனல் பறக்கும் விவாதங்கள் மூலம் மோதிக் கொள்ள வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள்.கொலைகாரர்களையும் , கொள்ளைக் காரர்களையும், மோசடிப் பேர்வழிகளையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தர வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள்.ஆனால் நேற்று சென்னை சட்டக் கல்லூரியில் நடந்தது என்ன?நீதி மன்றத்திலே சட்டத்தின் துணை கொண்டு வாதப் பிரதிவாதங்களில் மோதிக் கொள்ள வேண்டிய வழக்குரைஞர் ஆவதற்காகப் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று கையில் தடிகளுடனும், கொடிய ஆயுதங்களுடனும், கூரிய கத்திகளுடனும் தங்களது சக மாணவர்களுடன் மோதிக் கொண்டனர்.தாக்குதல்கள் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நடை பெற்றுள்ளது. காவல்துறையினர் கல்லூரிக்கு உள்ளே நுழைய கல்லூரி முதல்வர் அனுமதி தராததால் காவலர்களும் வேடிக்கை பார்த்தனராம்.காவலர்கள் இதற்கு முன் பல தடவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தலையிட்டு, கடைசியில் தங்கள் மீதே குற்றம் சுமத்தப் பட்ட மோசமான அனுபவங்களை நினைத்துப் பயந்து இந்த முறை அமைதி காத்திருக்கலாம் எனத் தெரிகிறது.சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைப் பார்த்து - இவர்கள் கையில் நாளைய நீதி மன்றங்கள் எப்படி நடக்கப் போகின்றன? - சட்டத்தை இவர்களா காக்கப் போகிறார்கள் ? -என்று மக்கள் மனம் வேதனையில் துடித்தது.அதைவிட அதிர்ச்சியான தகவல் சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த மோதல் அவர்களுக்கிடையே பல நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த ஜாதி ரீதியிலான பகையால் ஏற்பட்டது என்பதே.படிக்கும் இளைஞர்கள் மனதில் சாதிய உணர்வு இருப்பதே வேதனையான தகவல் என்றால் , அதற்காக தங்களுக்கிடைய கொடூரமாக மோதிக் கொண்டார்கள் என்றால் சாதி அவர்கள் மனதில் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்க வேண்டும்.இப்படி கலவரத்தில் சில மாணவர்கள் ஈடுபட்டதை மற்ற மாணவர்கள் கை கட்டி வேடிக்கை பார்த்ததை பார்த்தால் இவர்களிடம் இருக்கும் நாட்டுப்பற்று வெளிப்படவில்லையா?தங்கள் கல்லூரியிலேயே தங்களது சக மாணவன் ஒருவன் தங்கள் கல்லூரி மாணவர்களாலேயே தாக்கப் படுவதைத் தடுக்காது வேடிக்கை பார்த்த இந்த மாணவர்களிடம் சமூக அக்கறையை எப்படி எதிர்பார்ப்பது?படிக்காத பாமரர்கள் சாதிப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது இதற்கெல்லாம் காரணம் கல்வியறிவு இல்லாததே, மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது என்று பலரும் நம்பி வந்த சூழலில் சட்டம் பயிலும் மாணவர்களே மோதிக் கொண்டது அனைவரையும் அதிரச் செய்துள்ளது.சாதிகள் இல்லை, சாதி வேற்றுமைகள் பாராது ஒன்றுபட்டு உழைத்தால் மட்டுமே நமது நாட்டை உயர்த்த முடியும் என்று பாமர மக்களுக்கு உணர்த்த வேண்டிய மாணவ சமுதாயமே சாதியால் பிளவு பட்டு வன்முறையில் ஈடுபட்டது எந்த வகையிலும் ஏற்க முடியாதது அல்லவா?நல்லவர்களோ கெட்டவர்களோ இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த மாணவர்கள் தானே, இவர்களை எப்படி நல்வழிப் படுத்தி , நல்ல ஒழுக்கம் உள்ள குடிமகன்களாக மாற்றுவது என சிந்தித்து செயல்பட வேண்டியது அரசின் கடமை.இந்தப் பிரச்சினையிலும் அரசானது வழக்கம் போல வழக்கு, விசாரணை,கைது , விசாரணைக் கமிசன் என்று எதையாவது செய்து விட்டு அத்துடன் தனது கடமை முடிந்து விட்டதாக எண்ணி ஒதுங்கி விடக் கூடாது.இது போன்ற பிரச்சினைகளின் மூல காரணம் என்ன?படிக்கும் மாணவர்களின் மனதில் சாதி வெறி குடியேற என்ன காரணம்?படித்த மனங்களில் கூட சாதிய எண்ணங்கள் ஊடுருவ என்ன காரணம்?படித்தவர்கள் மத்தியிலும் தலை தூக்கும் இந்த சாதி வெறியை ஒழிக்க என்ன வழி?மாணவர்களுக்கு என்ன மாதிரியான வழிகளில் சாதிய ஒழிப்பு குறித்து போதிக்கலாம்?மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக கல்வியில் செய்யப் பட வேண்டிய மாறுதல்கள் என்னென்ன?எதிர்கால சந்ததிகள் சாதிய எண்ணம் துளியும் இல்லாமல் வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?என்றெல்லாம் பொறுப்புணர்வுடன் அலசி ஆராய்ந்து ஆரம்பக் கல்வியில் இருந்தே மாணவர்களை, சாதிய எண்ணங்கள் இல்லாத சமூக அக்கறை கொண்ட நல்ல குடிமகன்களாக மாற்றக் கூடிய வகையில் கல்வித் திட்டத்தையே மாற்றி அமைத்து இனி வரும் சந்ததிகளாவது அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உறுதி கொடுக்க வேண்டியது அரசின் கடமை.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடங்கள் போதிப்பது போல நல்லொழுக்கத்தையும், நாட்டுப் பற்றையும், மாணவர்களின் எதிர்காலக் கடமைகளையும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும்.மாணவர்களை அறிவிற் சிறந்த சான்றோர்களாக மாற்றும் அதே வேளையில் ஒழுக்கமுள்ள, நாட்டுப் பற்றுள்ள நல்ல குடிமகனாகவும் மாற்றுவதே முழுமையான கல்வி ஆக அமையும்.அப்படி இல்லாத பட்சத்தில் மாணவர்கள் படித்தும் பாமரர்களாகவே இருப்பர், நாட்டில் கல்வி அறிவு பெருகுவதால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்...............

கருத்துகள் இல்லை: