தமிழகத்தில் நவகிரகங்களுக்கு என தனிக்கோயில் உண்டென்றால் அது சூரியனார் கோயில்தான். நவகிரக நாயகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தைத் தொலைத்த இடமும் இதுதான்.
ஊரின் பெயருக்கேற்ப மூலவர், சிவசூரியப் பெருமான். தன் மனைவிகளான உஷாதேவி, சாயா தேவி சகிதம் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். அவர் தன் இருகரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குவது கொள்ளை அழகு!
சூரியனின் வெம்மையைத் தணிப்பது போல அவருக்கு நேரெதிரே வியாழ பகவான் (குரு) காட்சியளிக்கிறார்.
வானவெளியில் கிரகங்கள் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கிறதோ அதே பாதையில் நவகிரகங்களும் இந்த சூரியனார் கோயிலில் அமைந்திருக்கின்றன. 9 கிரகங்களும் தங்களுக்குரிய ஆயுதங்கள், வாகனங்கள் என்று எதுவுமின்றி, அமைதியும், புன்முறுவல் தவழும் முகமுமாக அனுக்ரஹ மூர்த்திகளாகக் காட்சி தருவது மிகவும் சிறப்பானது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான கோயிலில் சூரியனுக்கு உரிய ஆலயத்தைக் கட்டியவர், முதலாம் குலோத்துங்க சோழன். மற்ற கிரகங்களுக்குரிய தனிக் கோயில்கள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டன.
இந்த ஆலயத்தில் உள்ள பிள்ளையார், கோள் தீர்த்த விநாயகர். நவகிரகங்களின் சாபமான கோள் நீக்கியவர் என்பதால் இந்தப் பெயர்.
நவகிரக தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது. சூரியனார் கோயில் செல்பவர்கள், அருகில் உள்ள திருமங்கலக்குடி சிவன் கோயிலுக்கும் சென்றால்தான் முழுமையானதாக இருக்கும். ஏனென்றால் நவகிரகங்கள், தங்களின் சாபம் தீர வழிபட்டது திருமங்கலக்குடி பிராணவர தேஸ்வரரையும், மங்கள நாயகியையும்தான். அருமையான, பழமையான ஆலயம் அது. பாடல் பெற்ற தலமும் கூட.
நவகிரக நாயகர்கள் தம்மை வழிபடுபவர்களுக்கு நற்பலன்களை மிகுதியாகவும் தீயபலனை தணிவித்தும் வினைப்பயனை ஊட்டுவார்கள். சிவனடியார்களுக்கு எப்போதும் நல்லவற்றையே செய்வார்கள் என்கிறார் சம்பந்தர்.
`ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.'இதோ, நவகிரக நாயகர்களுக்கு ஏற்பட்ட பிரச்னையையும், அது தீர்ந்த விதத்தையும் காண்போமா?
காலம்இமயமலைச் சாரல்.
முனிவர்கள் எல்லாம் அங்கங்கே தவம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இடமே பக்தி அலையில் தவழ்ந்து கொண்டிருந்தது.சர்வ வல்லமை பெற்ற அந்த முனிவர்கள் குழுவில் நடுநாயகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தார் காலவ மகரிஷி. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற 6 குற்றங்களும் இல்லாதவர் அவர். நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெட்டுப் புராணம், இருபத்தெட்டு ஆகமம், அறுபத்து நான்கு கலைகள், தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆகியவற்றில் கரை கண்டவர்.
அவரிடம் உள்ள மற்றொரு சிறப்பு, மூன்று காலங்களையும் அறியும் பேரறிவு. ஒருவரைப் பார்த்தால் போதும் அவர் எப்படிப்பட்டவர்? எப்படி இருந்தார்? எப்படி இருக்கிறார்? எப்படி இருக்கப் போகிறார்? என்பதை, முகத்தைப் பார்த்தே சொல்லும் அபாரமான சக்தி பெற்றிருந்தார். பல முனிவர்கள் கூட, தங்கள் எதிர்காலத்தைப் பற்றி இவரிடம் தினம் கேட்டுச் செல்வார்கள்.
ஒரு நாள் ஓர் இளம் துறவி, காலவ முனிவரைப் பார்க்க வந்தார். தன் எதிர்காலம் பற்றிக் கூறுமாறு கேட்டார்.
அவரை உற்றுப் பார்த்தார் முனிவர்.
வந்தவர் யார் எனப் புரிந்தது. காலதேவன்!
கையெடுத்துக் கும்பிட்டார் முனிவர். ``காலத்தைப் பற்றி காலதேவனுக்கே நான் சொல்வதா?''
காலதேவன் புன்னகைத்தார். ``ஊருக்கெல்லாம் எதிர்காலத்தைத் துல்லியமாகச் சொல்லும் முனிவரே, உம் எதிர் காலத்தில் நீர் என்ன பாடுபடப் போகிறீர்கள் என்று தெரியுமா?''
காலதேவன் எக்காளச் சிரிப்புடன் காணாமல் போனார்.
நவகிரக நாயகர்கள்
காலவ ரிஷி யோசிக்க ஆரம்பித்தார்.
இதுவரை என் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததே இல்லையே?
போன ஜென்மத்தில் தான் யாராக இருந்தோம்?
கண் முன் காட்சி ஓடிற்று. நண்டுகளின் காலை தினம் தினம் முறித்துத் தின்ற பாவக் காட்சிகள் அதிலே தெரிந்தன.
அதனால்? அதனால்?
காலவ ரிஷி திடுக்கிட்டார். காரணம் முற்பிறவியின் பாவ வினை காரணமாக, இந்தப் பிறவியில் அவரை, பெருநோய் பிடித்து ஆட்டப் போகிறது.
சித்தம் கலங்கினார் ரிஷி.
தோழ முனிவர்கள் ஆறுதல் பகர்ந்தனர். ``காலவரே முக்காலம் உணர்ந்த நீங்கள் கலங்கலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள் நவகிரகங்கள் தானே? நீங்கள் நவகிரகங்களை வழிபட்டு, விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்'' என்றனர்.
காலவரிஷிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வேறு இடம் சென்றார்.
ஒரு நல்ல நாளில் பஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று, நவகிரகங்களை தியானித்துக் கடும்தவம் புரிந்தார்.
தவத்தின் உக்கிரம், நவகிரக மண்டலங்களைத் தாக்கிற்று.
ஜுவாலையின் வெம்மை தாங்காமல் நவநாயகர்களும் ஒருசேர வந்து ரிஷிக்குக் காட்சியளித்தனர்.
பிடி சாபம்
பரவசமடைந்தார் முனிவர். நவகிரகங்களையும் விழுந்து வணங்கினார்.
``முனிவரே, உம் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்?''
``நவமண்டலாதிபர்களே, அடியேனைப் பெரு நோய் பற்றும் அபாயம் உள்ளது. அது அணுகாதபடி வரம் வேண்டும்.''
நவகிரக நாயகர்கள், ஆசி வழங்கி, வரம் தந்து அகன்றார்கள்.
வந்தது வம்பு.
இந்த விஷயம் பிரம்மாவிற்குத் தெரிய வந்தது. ஆத்திரத்துடன் நவகிரகங்களை அழைத்தார்.
``கிரகங்களே, நீங்கள் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள். சிவபெருமான் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளும் தங்களது வினைப்பயனை அடையவே, உங்களை நான் படைத்தேன். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல், காலவ முனிவருக்கு வரம் கொடுத்துள்ளீர்கள். எனவே உங்கள் 9 பேரையும் நான் சபிக்கிறேன். பூலோகத்தில் நீங்கள் பிறந்து, முனிவர் கஷ்டப்பட வேண்டிய கால அளவு வரை, அந்த நோய் உங்களைப் பற்றட்டும்'' என்று சாபமிட்டார் பிரம்மா.
அந்த 78 நாட்கள்
இடி ஒலி கேட்ட பாம்புபோல நவகிரகங்கள் துடித்தனர். ``படைப்புத் தொழிலின் முதல்வரே, எங்களை மன்னிக்க வேண்டும். முனிவரின் தவ ஜுவாலையின் வெம்மை தாங்காமல் வரம் தந்துவிட்டோம். எங்களுக்குச் சாப விமோசனம் தாருங்கள்.'' என்று வணங்கினர்.
பிரம்மா மனமிறங்கினார். ``நீங்கள் பூலோகத்தில் அர்க்கவனம் என்னும் வெள்ளெருக்கங்காட்டை அடையுங்கள். அங்கேயுள்ள பிராண வரதரையும், மங்கள நாயகியையும் வழிபட்டு தவம் செய்யுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை 78 நாட்கள் தவம் புரியுங்கள். எருக்க இலையில் தயிர் சாதத்தைப் படைத்து உண்ணுங்கள். சிவனின் அருளால் சாப விமோசனம் கிட்டும்.''
திருமங்கலக்குடி
சூரியன், குரு, சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய 9 பேரும் அர்க்கவனத்தை அடைந்தார்கள். நோய் வேறு அவர்களைப் பற்றியது.
தவித்துப் போன அவர்கள் விநாயகரை பிரதிஷ்டை செய்து, தங்கள் கோள்களைத் தீர்க்குமாறு வேண்டினர். அவர், கோள் தீர்த்த விநாயகர் ஆனார்.
கடும் நோன்பு இருந்தார்கள். பிரம்மா கூறியபடி தினமும் சிவனை வணங்கினர்.
எருக்க இலையில் தயிர் சாதத்தை வைத்து, பூஜித்து உண்டார்கள். (எருக்க இலையின் சாறுக்கு பெருநோயைத் தீர்க்கும் வலிமை உண்டு என்கிறது சித்த வைத்தியம்!)
79-வது நாள் பிராணவரதரும், மங்களநாயகியும் நவகிரகங்களுக்குக் காட்சி தந்தார்கள்.
அந்த நேரத்தில் அவர்கள் நோயும் முற்றிலும் நீங்கிற்று.
``நவகிரகங்களே, நீங்கள் தங்கி தவம் செய்த இந்த இடத்தில் உங்களுக்கென, தனி ஆலயம் உருவாகி, அது உங்களுக்கு உரிய தலமாக ஆகட்டும். இங்கே உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்ரஹம் செய்யலாம்'' என்று ஆசி கூறினார் சிவன்.சூரியனார் கோயில்
நவகிரக நாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.அப்போது காலவ முனிவரும் அங்கே வந்தார், வணங்கினார்.
தன் பொருட்டு நவகிரகங்களுக்கு ஏற்பட்ட நிலைக்காக வருந்தினார்.
``எல்லாம் நல்லதுக்காகவே. முனிவரே, நீங்கள் எங்களுக்காக இங்கே ஓர் ஆலயத்தை எழுப்புங்கள்'' என்று ஆசி கூறினர்.காலவ முனிவர், நவநாயகர்களின் ஆணைப்படி அமைத்த கோயில்தான் சூரியனார் கோயில். நவகிரகங்களே வழிபட்ட பிராணவரதரும், மங்களநாயகியும் இருக்குமிடம் திருமங்கலக்குடி.
சூரியனார் கோயில் செல்லும் பக்தர்கள் அருகிலுள்ள திருமங்கலக்குடிக்கும் சென்று வழிபட்டு வந்தால் எல்லா நலனும் அடையலாம்.
சூரியனார் கோயில்தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே அமைந்துள்ளது.
கும்பகோணம், மயிலாடுதுறை, ஆடுதுறையிலிருந்தும் பஸ்கள் செல்கின்றன.
அருகில் உள்ள திருமங்கலக்குடி ஆலயத்தையும் கட்டாயம் பார்க்கவேண்டும்.
நவகிரக தோஷம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகார தலம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக