
தல புராணம்கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர். பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு. பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா. உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகின்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் தன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவன். இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே என்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று. சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, தன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊன்றுகோலை எடுத்து சிவன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார். தன்னை சிவனுடன் இணைத்துக் கொண்டால் மட்டுமே தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார். பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது. அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியின் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளின் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம். தெய்வத்தின் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவியின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அதன் மூலம் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார். மனமுருகிய சிவன் தேவியின் தவத்தினை மெச்சி, தன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார். சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமென்று ஆணையிட்டார். இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் தன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வின் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக தன்னுடன் இணைவார்கள் என்றும் அறிவித்தார். அதன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா தன்னுடன் இணைந்த தேவியுடன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார். பின்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பின் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு
1 கருத்து:
அனைத்து கட்டுரைகளுமே மிக அருமை. தொடரட்டும் உங்களின் பணி.
கருத்துரையிடுக