
குடத்துக்குள் ஆகாயம் இருக்கிறது. ஆகாயம் என்பது என்ன? வெளி. ஆனால், அதிலும் வஸ்து இருக்கிறது. குடத்துக்குள் வேறு பொருளை அடைக்காவிட்டால் அந்த இடத்தில் ஆகாயம் அடைகிறது. அந்த ஆகாயம் எப்படி பெரிய அகில ஆகாயத்தில் கலக்கிறதோ அதே மாதிரி ஜீவாத்மாவை பரமாத்மாவில் லயிக்கச் செய்ய வேண்டும். இரண்டும் ஒன்று என்ற பேதமற்ற பாவனையில் சதா மூழ்கி மோனத்தில் இருப்பாயாக. விவேகசூடாமணியில் ஜகத்குரு ஆதிசங்கரர்காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து அடுத்து சிவகாஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் நோக்கி நடந்தார் ஜகத்குரு ஆதிசங்கரர். நடக்கும்போது அவருள் ஒரு பரவச உணர்வு ஓடிற்று. இந்தக் காஞ்சி மிகவும் புனிதமானது. மிகவும் தெய்வீகமானது என்ற உண்மை அவருக்குள் பூப்பூத்தது. தான் நிறுவிய மடங்களுக்கெல்லாம் தலையாயதாக ஒரு மடத்தை இங்கே நிறுவி, இந்து மதத்தை உய்விக்கும் ஓர் ஆலவிதையை விதைக்க வேண்டும் என்ற ஆவல் ஆசார்யாளுக்குள் உண்டாயிற்று. தான் காஞ்சியில் நிறுவப்போகும் சங்கரமடம் காலம் காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்குச் செழித்திருந்து, பாரதத்துக்கே ஆன்மிகப் பணியாற்றும் என்ற உண்மை அவருக்குள் ஓடிற்று.ஏகாம்பரநாதர் கோயிலுக்கு முன்பாக ஒரு வெற்றிடத்தில் நின்றார் சங்கரர். கண்மூடினார். இந்த இடம்... இந்த இடம்தான் என்று அவருக்குள் தோன்றிற்று. மகிழ்வுடன் ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் காலடி பதித்தார்.முதலில் அவர் அடைந்தது அந்த மாமரத்தடியை. மரத்தை அண்ணாந்து பார்த்த ஆசார்யாள், அதைக் கையெடுத்து வணங்கினார். அதன் சிறப்பு அவருக்குத் தெரியும்.அந்தக் கதை...கயிலாயத்தில் ஒரு நாள்.காதல் வசப்பட்டிருந்த சிவபெருமான், பார்வதியோடு அர்த்தாசனத்தில், சம அந்தஸ்து கொடுத்து அமர்ந்திருந்தார்.அப்போது ஈசனின் பிரியமானவர்களான கோடிசக்திகள் அவரைக் கோபத்துடன் நெருங்கினார்கள். ``இறைவா, நீங்கள் பார்வதிக்கு அர்த்தாசனம் கொடுத்து, சம அந்தஸ்து தந்திருப்பதைப்போல் எங்களுக்கும் தர வேண்டும்'' என்று வினவினார்கள்.சிவபெருமான் புன்னகைத்தார். ``இந்த கயிலாயத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் என்னுடைய அம்சத்தில் தோன்றியவர்கள். அதுபோல இங்கேயுள்ள பெண்கள் அனைவரும் பார்வதிதேவியின் அம்சமாக உருவானவர்கள். எனவே, ஆண்களுக்கு நான் தலைவன். பெண்களுக்கு பார்வதிதான் தலைவி. இதிலிருந்தே புரியவில்லையா? தலைவனுக்கும், தலைவிக்கும் கட்டுப்பட்டவர்கள்தான் நீங்கள். உங்களுக்கு எப்படி நான் சரியாசனம் கொடுக்க முடியும்? எனக்குச் சரிநிகராக அமரக்கூடியவள் பார்வதி மட்டும்தான்'' என்று கூறினார் இறைவன்.சக்திகோடிகள் நொந்துபோய் விட்டார்கள். ``எங்கள் நாதரே, சக்தி கோடியான எங்களுக்குச் சரியாசனம் கொடுக்காதது தவறு. எங்களைவிட பார்வதி எந்த விதத்தில் உயர்ந்தவள்? கல்வி கேள்விகளில் சிறந்தவளா? புத்திசாதுர்யம் மிகுந்தவளா? இல்லை, எங்களைவிடத்தான் அழகியா?'' என்றெல்லாம் அவதூறாகப் பேசினார்கள்.அவர்களின் கர்வத்தைப் போக்கடிக்க விரும்பிய இறைவன், அந்தப் பெண்கள் அணிந்திருந்த உடைகள் எல்லாம் மாயமாக மறைந்து போகும்படி செய்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டுவிட்டார்.கோடி சக்திகளும் நிர்வாணமாகக் காட்சியளிப்பதைக் கண்ட பார்வதி உடனே, தானே புடவையாக மாறி, அவர்களின் மானத்தைக் காத்தாள். இத்தனை இழித்துச் சொல்லியும், பார்வதி தங்களுக்கு உதவியதைக் கண்ட சக்திகள், வெட்கமாய்த் தலைகுனிந்தார்கள்.சிவபெருமான்தான் ஒரு முகூர்த்த நேரம் கண்களை இறுக மூடிக் கொண்டுவிட்டாரே, அதனால் அவரது கண்களான சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் தத்தம் வேலைகளைச் செய்ய முடியாமல், சும்மா இருந்து விட்டார்கள். அதனால், உலகமெங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. எல்லா ஜீவராசிகளும், செயலற்று இருந்தன. எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று. ஆம். பிரளயம் உண்டாகிவிட்டது.மார்க்கண்டேயர், உலகம் தண்ணீரில் மூழ்கி அழிவதைக் கண்ணால் பார்த்தார். அவரும் பிடிப்பாரில்லாமல் தண்ணீரில் தத்தளித்தபடியே தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார்.உடனே ஈசனைக் குறித்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ``இறைவனே, சிவபெருமானே, பிரளய வெள்ளத்தில் தத்தளித்து நீந்திக்கொண்டிருக்கும் என்னை, நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்,'' என்று பிரார்த்தித்தார்.அப்போது வேதவடிவமான மாமர இலை ஒன்று வெள்ளத்தில் மிதந்தபடி தெரிந்தது. அதன் அருகே சென்றார் மார்க்கண்டேயர். என்ன ஆச்சர்யம்! அந்த மாவிலை திடீரென கிளை பரப்பி, பிரமாண்டமான மாமரமாக கனிகளுடன் வளர ஆரம்பித்தது.அதைக்கண்ட மார்க்கண்டேயர், இது இறைவனின் கருணைதான் என்பதை உணர்ந்து, அந்த மரத்தின் மேல் வேகமாக ஏறினார். அதன் உச்சிக்குச் சென்று, சுற்றிலும் பிரளய வெள்ளம் சுழன்று ஓடுவதைக் கண்டார்.சிவபெருமானே மாமரமாக வந்து தன்னைக் காப்பாற்றியிருப்பதாக நினைத்த அவர், மரத்தின் உச்சியில் இருந்தபடியே யதேச்சையாக கீழே, அதன் வேர்ப்பகுதியைப் பார்த்தார், மெய்சிலிர்த்துப் போனார்.அங்கே ஜோதி வடிவமாக, சிவ சொரூபமாக பிரமாண்டமான ஒரு நகரமே தெரிந்ததைக் கண்டதும் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.`உலகமே அழிந்து போயிருக்க, இந்தப் பிரளய வெள்ளத்திலும் ஒரே ஒரு நகரம் மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தண்ணீரின் மத்தியில் ஒரு தீவு போல ஜோதி வடிவில் காட்சியளிக்கிறதே' என்று வியந்தபடியே, மாமரத்தின் மேலேயிருந்து கீழே இறங்கி வந்தார் மார்க்கண்டேயர்.அப்போது, அந்த மாமரத்தின் ஓர் ஓரமாக நின்று, அந்த மரத்திலிருந்த மாம்பழம் ஒன்றைப் பறித்து யாரோ தின்று கொண்டிருப்பதைப் பார்த்தார் முனிவர்.``யாரப்பா நீ?'' என்று அவர் கேட்க, அந்த மனிதன் - இல்லையில்லை- தெய்வம் திரும்பிப் பார்த்தது. அவர்... முருகப் பெருமான்!முருகனைக் கண்ட முனிவர் மெய்சிலிர்த்து, வணங்கி, ``கந்தனே... கதிர்வேலனே... இந்த இடத்தின் பெயர் என்ன? இது மட்டும் அழியாமல் இருப்பதேன்? இந்த மாமரத்தின் சிறப்பு என்ன என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்'' என்று இறைஞ்சினார்.உடனே முருகப்பெருமான் புன்னகையுடன், ``சொல்கிறேன் மார்க்கண்டேயா... என்றும் அழியாத இந்த இடத்தின் பெயர் காஞ்சி. பிரளயத்தையே வென்ற புண்ணிய பூமி இது. ஒவ்வொரு முறை பிரளயம் ஏற்படும்போதும் காமாட்சிதேவி, தன் வல்லமையால் இந்த காஞ்சியைக் காப்பாற்றி வருவதால், பிரளயஜித் என்றும் இந்த ஊரைச் சொல்லலாம். இந்த மாமரம் முழுக்க முழுக்க சிவபெருமானின் வடிவமாகும். அவரே இந்த மரத்துக்கு பீஜமாகி, விருட்ச ரூபமாக தரிசனம் தருகிறார். இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள் வேத வித்யா சொரூபமாகும். இதைச் சாப்பிட்டவர்கள் வேத வித்தைகளில் குருவாகத் திகழ்வார்கள்.''அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், முருகனை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, தானும் அந்த ஏகாம்பர மாமரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்து உண்டார்.கச்சிஏகம்பனின் கதையை மனத்துக்குள் நினைத்தபடி மூலவரை தரிசிக்க கர்ப்பகிரகம் நோக்கி நடந்தார் ஜகத்குரு ஆதிசங்கரர்.அங்கே, எங்கும் இல்லாததுபோல் மெலிதாக, சற்றே சாய்ந்தபடி லிங்க உருவில் காட்சி தந்த ஏகாம்பரநாதரை வணங்கினார். நமஸ்கரித்தார். கண்மூடி நெடுநேரம் நின்றார்.ஜகத்குரு கண்விழித்தபோது, ``ஏகாம்பர நாதரின் வடிவம் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது? அவர் எதற்காக வந்தார்?'' என்று வினா எழுப்பினார் ஒரு சீடர்.ஆசார்யாள் புன்னகைத்தார். ``எதற்காக வந்தாரா? நம் காமாட்சியம்மனைத் திருமணம் புரியத்தான் இங்கே வந்தார். அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்'' ஆரம்பித்தார் ஆதிசங்கரர்.வெள்ளத்தில் சிக்குண்டவன் கரையையும், வெய்யிலில் தவிப்பவன் நிழலையும், மழையில் தவிப்பவன் கூரையையும், இருளில் சிக்கியவன் ஒளிவிளக்கையும், குளிரில் நடுங்குபவன் தீயையும் எப்படி உளமார நாடுவானோ, அதுபோல மனமே, பயத்தைப் போக்கி, இன்பத்தை அளிக்கும் சிவபெருமானின் பாதக்கமலங்களை நீ நாடுவாயாக. சிவானந்த லகரியில் ஜகத்குரு ஆதிசங்கரர்ஒரு சமயம் பார்வதிதேவி விளையாட்டாய், துடுக்குத்தனமாய் ஒரு காரியம் செய்தாள்.என்ன அது?சிவபெருமான் அமர்ந்திருக்கும்போது அவருக்குத் தெரியாமல் பின்னால் பதுங்கிச் சென்று, அவரது கண்களை இறுகப் பொத்தினாள். நாமெல்லாம் கண்ணாமூச்சி ஆடுவோமே அப்படி!ஆனால், நடந்தது விபரீதம்! ஈசனின் மூன்று கண்களும் எவை? சூரியன், சந்திரன், அக்னி ஆயிற்றே.பார்வதி கண்களைப் பொத்தியதும் உலகமே இருண்டு போயிற்று. உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் பாவங்களும் கருமை நிறமாகப் பெருகி, வெளிவந்தன. அவையனைத்தும் தங்க நிறத்தில் இருந்த பார்வதியின் மேலே பட்டு, அவளைக் கறுப்பு நிறமாக மாற்றிவிட்டன.அந்த சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்த பார்வதி தேவி, ஈசனைப் பொத்தியிருந்த தன் கைகளை விருட்டென விலக்கினாள். அப்போதுதன் உடலின் நிறம் கருமையாக மாறியிருப்பது கண்டு கலங்கினாள், வருந்தினாள்.``ஈஸ்வரா, தெய்வமே.... தகதகவென தங்கம்போல் ஜொலிக்கும் என் மேனி, இப்படி மாறிவிட்டதே... என்ன காரணம்?'' என்று இறைவனை வேண்டினாள்.``தேவி, இது கருமை நிறமல்ல. உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ மூட்டை இது!''பார்வதி துடித்துப் போய்விட்டாள். ``ஈசனே, இந்தப் பாவச் சுமையிலிருந்து நான் விடுபடுவது எப்படி?'' என்று வினவினாள்.அதற்கு இறைவன், ``எல்லாம் நன்மைக்கே. நீ உடனே பத்ரிக்குச் சென்று அங்கே ஒரு குழந்தையாக மாறுவாயாக. அப்போது, குழந்தைப் பேறில்லாத காத்யாயன முனிவர், அந்தப் பக்கம் வருவார். அவர், தனியாக இருக்கும் பச்சிளம் குழந்தையான உன்னைக் கண்டதும் வாரியெடுத்துக் கொள்வார். அவருடைய ஆசிரமத்திலேயே நீ சில காலம் வாழ்வாயாக. அதற்குள் நீ யார் என்பதை காத்யாயன முனிவர் புரிந்து கொள்வார். பின் எனது ஆணைப்படி யோக தண்டம், ஜபமாலை, தீபஸ்தம்பம், குடங்கள், விசிறி, சாமரம், வறுத்த பயிறு, குடை ஆகியவற்றை உனக்குத் தருவார். அவைகளைப் பெற்றுக் கொண்டு நீ காசிக்குச் செல்ல வேண்டும்.நீ காசிக்குச் செல்லும்போது அங்கே கடும் பஞ்சம் நிலவிக் கொண்டிருக்கும். உணவுக்காக மக்கள் அல்லாடுவார்கள். நீ அந்த மக்களின் பசிப்பிணியைப் போக்கி, அன்னபூரணியாக அந்த ஊரிலேயே பன்னிரண்டு வருடங்கள் இருப்பாயாக.அதன்பின்னர் தெற்குத் திசை நோக்கிச் செல். அப்படிச் செல்லும்போது எந்த இடத்தில் உன் கையிலிருக்கும் ருத்ராட்சமாலை, வில்வ மாலையாகவும்; குடை, நாகாபரணமாகவும்; யோக தண்டம், திரிசூலமாகவும்; விசிறி, கிளியாகவும்; சாமரம், பெண்களாகவும்; குடம், தீபமாகவும்; வறுத்த பயிறு, முளைப் பயிராகவும்; கங்கை நீர், பாலாகவும் மாறுகிறதோ அந்த இடம்தான் புனிதமான காஞ்சித் தலம் என்பதைப் புரிந்து கொள்வாயாக.அந்தக் காஞ்சியில் மாமரத்தின் அடியில் நான் லிங்க உருவில் இருப்பேன். அந்த லிங்கத்தை வழிபட்டு வருவாயாக. அந்த லிங்கத்தை தினசரி பாலால் அபிஷேகம் செய்து நாகாபரணத்தால் அலங்காரம் செய்து வில்வ மாலையைச் சாத்தி, வணங்குவாயாக. லிங்கத்தின் இருபக்கமும், இரண்டு பெண்களைக் காவலாக வைத்து, கிளியைக் கையில் ஏந்தி, ஊசியை நாட்டி, அதன் நுனியில் பஞ்சாக்கினியின் நடுவிலிருந்து என்னைக் குறித்து தவம் செய்வாயாக. அப்போது நான் உனக்குக் காட்சி தந்து, உன்னைத் திருமணமும் செய்து கொள்கிறேன். அந்த விநாடியே உன் கருமை நிறம் விலகி, வழக்கமான தங்க நிறத்துடன் ஜொலிப்பாய்'' என்று கூறினார்.ஈசனின் உத்தரவுப்படி பார்வதிதேவி, பத்ரிகாசிரமம் சென்றாள். காத்யாயன முனிவரின் குழந்தையாக அவதரித்தாள். மெல்ல வளர்ந்தாள். பின் உரிய வயதில் முனிவரிடம் ஜபமாலை முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு காசிக்குச் சென்று, பஞ்சம் தீர்த்து அன்னபூரணி ஆனாள்.பின்னர் தென்னாடு நோக்கி நடந்தாள். ஈசன் கூறியபடி யோக தண்டம் முதலானவை ஓரிடத்தில் மாற, அதுதான் காஞ்சிபுரம் என்பதைப் புரிந்து கொண்டாள். அங்கே ஒவ்வொரு மாமரமாகத் தேடிக்கொண்டே போனாள். கடைசியில் அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அகமகிழ்ந்தாள். அங்கேயே தங்கி, நேரம் தவறாமல் ஈஸ்வரனை வழிபட்டு, தவம் புரிந்து வந்தாள்.எவ்வளவு தவம் செய்தும் சிவபெருமான், அவளுக்குக் காட்சி தரவில்லை. அந்த சமயம், திரிலோக சஞ்சாரியான நாரதர் அந்தப்பக்கம் வந்தார். அவரிடம் தன் குறையைச் சொன்னாள் பார்வதிதேவி.``கவலைப்படாதே உமையே, பஞ்சபாண மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதைச் சொன்னால் உன் எண்ணம் கைகூடும்..'' என்ற அவர், அந்த மந்திரத்தை உபதேசம் செய்துவிட்டு மறைந்தார்.அதன்படி தேவி, அந்தப் பஞ்சபாண மந்திரத்தை நெடுங்காலம் உச்சரித்து தவம் செய்தாள்.அந்த தவ அக்னி, கயிலாயம் வரை சென்று தகித்தது. அதனால் மோகாவேசம் கொண்டார் இறைவன். தன் திருமுடியில் வசிக்கும் கங்கையில் மூழ்கி எழுந்தும் அவரது ஆவேசம் அடங்கவில்லை.``கங்கையே, உன் வடிவமான நதியில் மூழ்கியும் என் அக்னி தீரவில்லை. உடனே நீ பார்வதி தவம் செய்யும் இடத்திற்குச் சென்று, அவள் செய்யும் மந்திரங்களைத் தடுத்து நிறுத்து'' என்று ஆணையிட்டார்.உடனே கங்கையும் பிரளயமாய் காஞ்சிக்குப் புறப்பட்டாள். அதைக் கண்ட பார்வதிதேவி, தன் சக்தியில் ஒன்றான காளியை ஏவி, அந்தப் பிரளயத்தைத் தடுக்கச் சொன்னாள்.அதன்படியே கோபத்துடன் சென்ற காளிதேவி, தன் கையில் இருந்த மண்டை ஓட்டில் பிரளய வெள்ளம் எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டாள். அதனால் அந்தக் காளிக்கு, பிரளய பந்தினி என்ற பெயர் ஏற்பட்டது.கங்கையும் தோற்றுப்போனதைக் கேள்விப்பட்ட சிவபெருமான், அடங்காக் கோபம் கொண்டார்.மீண்டும் ஒரு பெருவெள்ளம் பார்வதிதேவியை நோக்கிப் பாய்ந்தோடி வந்தது. யார் அது? இதிலென்ன சந்தேகம்... சிவபெருமானின் வடிவமே அது. ஆயிரம் முகங்களோடு மாபெரும் பிரளயமாய் வானுயர உயர்ந்து வந்தது அந்த வெள்ளம்.அவ்வளவுதான்..! அதைப் பார்த்ததும் பார்வதிதேவியே நடுநடுங்கிப்போனாள். அந்த ஊழி வெள்ளம், பார்வதிதேவியைப் பிரவாகமாய் நெருங்க, கதறினாள் தேவி.ஏன்?தனக்கு ஏதாவது ஒன்றாகிவிட்டாலும் கவலையில்லை. தான் பூஜித்து வரும் மணல் லிங்கம் மாசுபட்டுவிடுமோ... கரைந்து விடுமோ... என்று கலங்கினாள். ``ஈஸ்வரா...!'' என்று கதறியபடி, தன் இரு கரங்களால் அந்த சிவலிங்கத்தை மார்போடு சேர்த்து இறுகக் கட்டித் தழுவிக்கொண்டாள்.அந்தத் தழுவலில், ஸ்பரிசத்தில் அதுவரை ஈசனைத் தகித்துக் கொண்டிருந்த காமாக்னி கரைந்து போனது.அந்த வினாடியே பார்வதி தேவியின் கருமை நிறம் மறைந்து பொன்னிறம் மீண்டும் தோன்றிற்று.சிவபெருமான், பார்வதிதேவிக்குக் காட்சி தந்தார். தேவியைத் திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டார்.அங்கே அப்போது வந்த சிவகணங்களும், ரிஷிகளும் பார்வதி, பரமேஸ்வரரின் அழகைக் கண்டு வியந்து அவர்களைத் திருமணக் கோலத்தில் தரிசிக்க விரும்பி வேண்டினார்கள்.உடனே இறைவன், திருமாலை அழைத்து, ``எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.உடனே மகாவிஷ்ணு, தேவர்களை அழைத்து, ``நமது உலகங்களுக்குச் சென்று, திருமணத்திற்கு வேண்டிய உடைகள், உடைமைகள், மலர்கள் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள்'' என்று கூற, அவர்களும் விரைந்தார்கள்.காஞ்சிபுரம் நகரமே அழகாக அலங்காரம் செய்யப்பட்டது. வேதாகம முறைப்படி ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் நடந்தன. பத்தாவது தினத்தில்,உத்திர நாளில், சிவபெருமானான ஏகாம்பரநாதரையும், பார்வதியான காமாட்சி தேவியையும் திருமண மேடையில் அமர்த்தினார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மந்திர கோஷங்கள் ஒலித்தன.மகாவிஷ்ணுவும், மகாலஷ்மியும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஆரம்பித்தார்கள்.லட்சுமி தன் திருக்கரத்தால் பாலை ஊற்ற, ஏகாம்பரேஸ்வரரின் திருப்பாதத்தை, மகாவிஷ்ணு அலம்பினார்.பின்னர் ஏகாம்பரநாதரின் திருக்கரத்தின் மீது காமாட்சியம்மனின் திருக்கரத்தை வைத்து, மந்திர நீர் வார்த்தார். சங்கு, பேரிகை, துந்துபி முதலான வாத்தியங்கள் முழங்கின. அந்தணர்கள் மந்திரம் ஓதினார்கள். பிரம்மா ஹோமத்தீயை வளர்த்தார்.சுபமுகூர்த்த நேரத்தில் காமாட்சி தேவியின் திருக்கழுத்தில் ஏகாம்பரநாதர் திருமாங்கல்யத்தை அணிவித்தார்.அப்போது தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் என்று அனைவரும் ஜய கோஷமிட்டார்கள். புதுமணத் தம்பதிகளை மனமார வாழ்த்தினார்கள்.கண்மூடி ஏகாம்பரநாதர் சன்னதியில் நின்றிருந்த ஜகத்குரு ஆதிசங்கரரின் மனத்திற்குள் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருமணக் காட்சி ஓடிற்று. அதைக் கண்டு பல நிமிடங்கள் பரவச நிலையில் இருந்தார்.அதே பரவசத்தோடு, அற்புதமான சிவ பஞ்சாக்ஷர துதியால் பரமேஷ்வரனைப் போற்றித் துதித்தார்.சிவபெருமான் மீது ஆதிசங்கரர் பாடிய அந்த சிறப்பான ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் படிக்கலாமா!(தமிழாக்கம்: ரா.பத்மநாபன், மும்பை 89).நாகேந்த்ரஹாராயத்ரிலோசனாயபஸ்மாங்கராகாயமஹேச்வராய,நித்யாய சுத்தாய திகம்பராயதஸ்மை நகாராய நம: சிவாயமந்தாகிநீஸலில சந்தனசர் சிதாயநந்தீச்வர ப்ரமதனாத மஹேச்வராய,மந்தாரமுக்யபஹுபுஷ்பஸுபூஜிதாயதஸ்மை மகார மஹிதாய நம:சிவாய.நாகபதி மாலையானே!நயனங்கள்மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்ய! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கைநீர்ச்சாந்தம் மணங்கமழப் பூசிட்டோய்!தொல்நந்திப்ரமதபதிதூத்தலைவா! மகேசனே!நல்மணமந்தாரமுதல்நறைமலராற் பூசைகொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே!போற்றி! சிவாய கௌரீ வத்னாப்ஜப்ருந்தஸூர்யாய தக்ஷாத்வர நாசனாய,ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாயதஸ்மை சிகாராய நம: சிவாய.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமாதிமுனீந்த்ர தேவார்சித சேகராய,சந்த்ரார்க வைச்வாநர லோசநாயதஸ்மை வகாராய நம: சிவாய சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத்தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி!வசிட்டமுனி கலசமுனி கௌதமமாமுனிவோர்கள்இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!மிசைக்கதிரோன் திங்கள், தீவிழிமூன்றாய் ஆனவனே!நசிவில்லாய்! வகாரனே நமசிவாயனே! போற்றியக்ஷஸ்வரூபாய ஜடாதராயபினாக ஹஸ்தாய ஸனாதனாய,திவ்யாய தேவாய திகம்பராயதஸ்மை யகாராய நம சிவாய
பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய: படேத் சிவஸந்திதௌ.சிவலோ கமவாப்நோதி சிவேன ஸஹமோததே- யட்சஉரு எடுத்தோனே! எழிலாரும் சடை தரித்தோய்!இச்சையுடன் பினாகமதை ஏந்து திருக் கையானே!அட்சரனே! சிறந்தோனே! அருந்தேவா! திகம்பரனே!நட்புநல யகாரனே! நமசிவா யனே! போற்றி!சிவனுடையப் பஞ்சாட்சரத்தால்சேர்த்திட்ட இத்துதியைச்சிவனுடைய சந்நதிமுன் செப்பிடுவார் யாவரவர்சிவனுலகை அடைந்து, பினர் சிவனோடும் ஒன்றிடுவார்:சிவனுடைப்பேர் ஆனந்தம்சேர்ந்ததனில் ஆழ்குவரே!கண் திறந்து மீண்டும் ஏகாம்பர நாதரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தார்.
பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய: படேத் சிவஸந்திதௌ.சிவலோ கமவாப்நோதி சிவேன ஸஹமோததே- யட்சஉரு எடுத்தோனே! எழிலாரும் சடை தரித்தோய்!இச்சையுடன் பினாகமதை ஏந்து திருக் கையானே!அட்சரனே! சிறந்தோனே! அருந்தேவா! திகம்பரனே!நட்புநல யகாரனே! நமசிவா யனே! போற்றி!சிவனுடையப் பஞ்சாட்சரத்தால்சேர்த்திட்ட இத்துதியைச்சிவனுடைய சந்நதிமுன் செப்பிடுவார் யாவரவர்சிவனுலகை அடைந்து, பினர் சிவனோடும் ஒன்றிடுவார்:சிவனுடைப்பேர் ஆனந்தம்சேர்ந்ததனில் ஆழ்குவரே!கண் திறந்து மீண்டும் ஏகாம்பர நாதரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக