வியாழன், 15 ஜனவரி, 2009

வியதீபாதம்


மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும். வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு. இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.பொதுவாக ஒவ்வொரு புண்ணிய தினத்தை ஒட்டி ஒவ்வொரு க்ஷேத்திரத்தில் பிரம்மோற்சவம் செய்வார்கள். இவ்விதம் திருவாதிரையை ஒட்டி சிதம்பர க்ஷேத்திரத்திலும், மகா வியதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு ஒரு மைல் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது."கோவில்' என்ற சிறப்புப் பெயர் தில்லைக்கும் திருவரங்கத்துக்கும் மட்டுமே உண்டு. உபநிஷத்துக் களால் உணர்த்தப்பட்ட விராட் புருஷனின் இதய மத்தியில் சிதம்பர க்ஷேத்ரம் அமைந்திருப்பதாக "ஜாபால தர்சனம்' என்ற உபநிஷதம் கூறுகிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கிறது. "சிதம்பர ரகசியம்' என்று போற்றப்படும் இந்த ஆகாயத் தத்துவத்தைப் பற்றி சாந்தோக்கியம், பிருகதாரண்யம், கைவல்யம் போன்ற உபநிடதங் கள் விளக்குகின்றன. உபாசனைகளில் குறிப்பிடப் படும் ஆறு ஆதார ஸ்தானங்களில், மூலாதாரத்தைக் குறிக்கும் தலம் திருவாரூர் என்றும், சுவாதிஷ் டானத்துக்குரிய தலம் திருவானைக்காவல் என்றும், மணிபூரகத்தைக் குறிப்பது திருவண்ணாமலை என்றும், தில்லையம்பதியான சிதம்பரத்தை அனாஹத க்ஷேத்ரமாகவும், விசுத்திக்குரிய தலமாக காளஹஸ்தியும், ஆக்ஞா க்ஷேத்திரமாக முக்தியைத் தரும் காசியும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய பெருமை வாய்ந்த சிதம்பரேசனின் துணைவியான அன்னை சிவகாம சுந்தரியை வாக்கிற்கு அதிதேவதையான "மனோன்மணி' என்ற சக்தி ரூபமாக சாத்திரங்கள் கூறுகின்றன.சிதம்பரத் தலத்திற்கு கனகசபை அல்லது பொன்னம்பலம் என்று பெயர். இதேபோல் ஹாலாஸ்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு ரஜதசபை அல்லது வெள்ளியம்ப லம் என்றும், திருவாலங்காடு தலத்துக்கு ரத்ன சபை என்றும், திருநெல்வேலி ஆலயத்திற்கு தாமிர சபை என்றும், திருக்குற்றாலத்திற்கு சித்ர சபை என்றும் பெயர் வழங்கி வருகிறது. இவையனைத்தும் கூத்தபிரானின் முக்கிய திருத்தலங்களாகும்.இவற்றைத் தவிர, ராமாயண காவியத்தாலேயே போற்றப்பட்ட தலம் "ஆதிசிதம்பரம்' எனப்படும் திருவெண்காடாகும். சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் நடராஜப் பெருமானுக்குத் தனி நடனசபை உண்டு. ஸ்படிகலிங்க பூஜையும், ஆகாயத் தத்துவ ரகசியமும் உள்ளன. ஒப்பற்ற அழகும் சான்னித்தியமும் உள்ள நடராஜரது பாதத்தில், பதினான்கு சதங்கைகளுடைய காப்பு அணிந்துள்ளார். பதினான்கு உலகங்களும் இவரது பாத அசைவினால் அசையும் என்பதை இது காட்டுகிறது. இவரது இடுப்பில் 81 சங்கிலி வளையங்கள் இணைத்த அரைஞாண் அணிந்துள் ளார். இது "ப்ரணவம்' முதலாக "நம' முடிய உள்ள 81 பத மந்திரங்களைக் குறிப்பிடுகிறது. இருபத் தெட்டு எலும்பு மணிகளைக் கொண்ட ஆபரணம் ஒன்றினையும் அணிந்துள்ளார். இது இருபத் தெட்டு சதுர்யுகங்கள் முடிந்துவிட்டதைக் குறிப் பிடுகிறது. இவரது மார்பில் ஒருபுறம் ஆமை ஓடும், ஒருபுறம் பன்றிக் கொம்பும்போல் அமைந்த பதக்கமும் அணிந்துள்ளார். இது "என்பொடு கொம் பொடு ஆமை இவை மார்பிலங்க' என்ற கோளறு பதிகத்தை நினைவூட்டுகிறது. இவரது தலையில் ஷோடச கலைகளைக் குறிக்கும் பதினாறு சடைகள் உள்ளன. மயிற்பீலியும் அணிந்துள்ளார். மீன் போன்ற வடிவத்தில் கங்கையும், பிறைச்சந்திர னும் இவரது சிரசை அலங்கரிக்கின்றன. இறைவ னது நடனத்தை அருகில் நின்று களிக்கும் அன்னை சிவகாமசுந்தரி, "மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவஸாக்ஷினீ' என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரியை நமக்கு நினைவூட்டுகிறாள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த நடராஜப் பெருமானின் பெருமையை விளக்கும் சிதம்பர மஹாத்மியம் என்ற நூல், "இறைவனது கரத்தில் உள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், அபயக் கரம் காத்தலையும், ஒரு கரத்தில் உள்ள அக்னி அழித்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன்மீது வைத்திருக்கும் பாதம் மறைத் தலையும் செய்கிறது. இந்த ஐந்தொழில்களையும் இறைவன் தனது ஸங்கல்ப மாத்திரத்தில் நடத்துவதை இது குறிப்பிடுகிறது' என்று கூறுகிறது.இவ்வாறு ஈசன் திருநடனம் புரியும் திருவாதிரைத் திருநாளில் நாம் அனைவரும் ஆடவல்லானாகிய சிவபிரானைப் போற்றிப் பரவுதல் வேண்டும்.அடுத்து, மார்கழி மாதத்தில் பரமேசுவரனை மகிழ்விக்கும் மகா வியதீபாத விரதத்தின் பெருமையைக் கவனிப்போம். ஸூத ஸம்ஹிதையில் தீர்த்த மாஹாத்மிய காண்டத்தில், "மகா வியதீபாதம் வரும் நாளன்று தற்கால குஜராத்தில் காடியாபாத் என்ற இடத்திலுள்ள ஜோதிர்லிங்கமான சோமநாதரையோ, திருவாரூர் தியாகேசரையோ, ராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாத சுவாமியையோ தரிசித்து வழிபடுதல் மிகச் சிறந்த பலனைத் தரும்' என்று கூறப்பட்டுள்ளது.சைவபூஷணம் என்ற ஆகம நூல், வியதீபாத தினத்தன்று அதிகாலையில் எழுந்து ஆசாரத்துடன் சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறது. இவ்விதம் ஒரு வருடத்தில் வரும் பதின்மூன்று வியதீபாத நாட்களிலும் செய்தால், ஸ்ரீபரமேசுவரன் எல்லாவித நன்மைகளையும் அளிப்பார் என்று கூறுகிறது. இப்பூஜையை மார்கழி மாத மகா வியதீபாதத்தில் தொடங்கி அடுத்த மகா வியதீபாதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வியதீபாதமும் நட்சத்திரங்களைப் போலவே இருபத்தேழு நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.முன்னொரு சமயம், சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மத்தில் அதிக ஈடுபாடுடைய சூரியன் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவ பிரானாவார். தவிர, இந்த மகா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்க ளும் அடங்கும். அதிலும் மகா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

1 கருத்து:

Muttuvancheri S.Natarajan சொன்னது…

அருமையான விளக்கம் ,நன்றி