செவ்வாய், 16 டிசம்பர், 2008

பொருள்தனை கொடுக்கும் அரைக்காசு அம்மன்!


சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை. வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம் என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயில். இக்கோயிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.
அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே! இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின் நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம். அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன் காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்ற அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.
ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும் தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும் மனம் வருத்தம் அடைவதும் உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது. அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில், ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் பீடம் ஒன்றினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்திருக்கிக்கின்றனர் ரத்னமங்கள மக்கள். குபேரர் கோயிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர் கோயிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது. இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள் வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின் கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும், இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம் என்று கோயில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.
அரைக்காசு அம்மனின் சிறப்பு
ஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும் தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள் உடனடியாக கிடைக்கும். அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை பிள்ளை஡ர் போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.
பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும் உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும் கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால் நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால் பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.
இத்திருக்கோயிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து 55 C, 55 K என்கிற இரு பேருந்துகள் செல்கிறது. இப்பேருந்தில் பயணித்து ரத்னமங்களம் பேருந்து நிலைய நிறுத்தத்திலோ அல்லது தாகூர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்திலோ இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
வருகிற 21ம் தேதி (மார்ச், 2008) பெளர்ணமி, வெள்ளிகிழமை மற்றும் பங்குனி உத்திரம் கூடிய நாளில் காலை 9 மணிக்கு இரத்னம சிகலம் அரைக்காசு விசேஷ பூச்சொரிதல் வைபவம் நடைபெறவிருக்கிறது.
பக்தர்கள் யாரும் அன்று இத்திருக்கோயிலுக்கு வந்து அரைக்காசு அம்மனை தரிசித்து சென்றால் அவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்

கருத்துகள் இல்லை: