செவ்வாய், 16 டிசம்பர், 2008

சிவராத்திரி


சிவன் மங்களன். சிவனை வழிபடுபவர்கள் மங்களங்களை அடைகிறார்கள். 'சிவ' என்ற சொல்லே மங்களத்தைக் குறிப்பது, சிவபூஜை எல்லா பூஜைகளிலும் தனித்தன்மையுடன் துவங்குவது, சிவபூஜை செய்பவர்களின் பாவமாகிய பஞ்சு மூட்டைகள் எரிந்த இடம் தெரியாமல் பறந்து, மறைந்து போகின்றன.
சிவனை மட்டும் வழிபடுபவர்களுக்கு இத்தகு மேன்மைகள் என்றால், அவனுடன் அன்னையையும் சேர்த்து வழிபடுபவர்கள் அடையும் நன்மைக்கோ அளவே இல்லை.
பூஜைகளில் சிறந்த பலனை நிறைந்தும், உடனேயும் தருவது ராத்ரீபூஜைகளே. இதனால்தான் ஷ'ராத்ரீ சூக்தம்' என்ற சூக்தமும் தனித்து விளங்குகிறது. 'பிராத சூக்தம்' என்று தனி சூக்தம் கிடையாது. ஒவ்வொரு தினத்திற்கும் ராத்திரி இருப்பது போல ஒவ்வொரு உயிருக்கும் ராத்திரி இருக்கிறது.
எல்லா ராத்திரிகளிலும் உயர்ந்தது சிவராத்திரியே. ராத்திரிகளில் வரும் நவராத்திரி பூஜையின் பூரண பலனை ஒரே ராத்திரியான சிவராத்திரி பூஜை வழங்கக் கூடியது. நவராத்திரி பூஜையில் அன்னைக்கு மட்டுமே சிறப்பு. சிவராத்திரி அன்னைக்கம் அப்பனுக்கும் உரியது. எனவேதான் சிவராத்திரி சிறந்ததாக விளங்குகிறது.
சிவனை மட்டுமே சிவராத்திரியில் வழிபடுபவர்கள் பாதிப் பலனையே அடைவார்கள். அன்னையையும் சேர்த்து வழிபடுவர்களே முழுப்பலனையும், மேன்மையையும் அடைவார்கள். சக்தியைத் தள்ளிச் சிவனை மட்டும் வழிபட நினைப்பது சிவத்துரோகமாகும்.
தூக்கம் என்பது மனிதனுக்குக் கிடைத்த சொர்க்கம். தூக்கம் இல்லாமல் போனால், துக்கம்தான் ஏற்படும். உடலும் உள்ளமும் உலர்ந்து போய், விரைவில் இறப்பை நோக்கி நடக்க வேண்டி வரும். உறங்கி எழுந்தவன் உழைக்கிறான். உறக்கம் கிட்டாதவன் அழுகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தந்து, மீண்டும் உழைக்க உயிர் தந்து காப்பது ராத்திரியே. இதைத் தந்து காத்தது சிவமும் சக்தியும்தான். எனவேதான், சிவனையும் தேவியையும் ராத்திரிகளில் வழிபடுகிறோம்.
இரவில் சாந்தியையும் ஒடுக்கத்தையும் தந்து காத்தவன் சிவன். அந்த ஒடுக்கத்தில் இருந்து மீண்டும் எழுந்து நடக்கச் செய்தவள் தாய். அன்னை அப்படிச் செய்யவில்லையென்றால் தூங்கியவன் தூங்கியவனே, எழுப்பினால் எதுவும் எழாது.எனவே சாந்தியும் ஒடுக்கமும் தந்த சிவத்திற்கு ஒரு ராத்திரியும், எழுந்து விழிப்புடன் தனது பழைய கர்ம மூட்டைகளைச் சுமந்து விரைவில் விடுதலை பெறச் செய்யும் அன்னைக்கு ஒன்பது ராத்திரிகளும் அமைத்த பெருமை நம் முன்னோடிகளான முனிவர்களைச் சார்ந்தது.
ஐந்து சிவராத்திரிகள்
ஐந்து நவராத்திரிகள், அதாவது ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வன்ய நவராத்திரி இருப்பது போல சிவராத்திரிகளிலும் ஐந்து உண்டு.
நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, பரிச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்பன அவை.
நித்திய சிவராத்திரி
ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பக்ஷ சிவராத்திரி
தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை.
ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
மாத சிவராத்திரி
மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமு வருவது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்தசி அம்மாதத்திய சிவராத்தியாகும். பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில் வரும் த்ருதியை அம்மாத சிவராத்திரி. சித்திரை மாதத்தில் தேய்பிறை எட்டாம் நாள் அம்மாத சிவராத்திரி. வைகாசி மாத முதல் அஷ்டமியும், ஆவணி மாதத்தில் வளர்பிறை அஷ்டமியும், அம்மாத சிவராத்திரிகளாகும். புரட்டாசி மாதத்தில் முதல் த்ரயோதசியும், ஐப்பசி மாதத்திய வளர்பிறை துவாதசியும் அம்மாதங்களின் சிவராத்திரிகளாகும். இதைப் போலவே கார்த்திகை மாதத்திய முதல் சப்தமி அஷ்டமியும், மார்கழியில் இரு பக்ஷ சதுர்தசிகளும் தை மாதத்தில் வளர்பிறை திருதியையும் மாத சிவராத்திரிகளாகும்.
மாத சிவராத்திரிகளில் பூஜை செய்பவர்களுக்கு மரண பயம் இல்லை. சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மஹா சிவராத்திரி
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது. சிவராத்திரியில் 'சிவபுராணம்' என்ற மாணிக்கவாசகர் அருளிய பாடல்கள் பாராயணம் செய்யச் சிறந்த தோத்திரமாகும். சிவராத்திரியில் மெளன விரதம் இருப்பது வாக்குவலிமையையும், மந்திர சித்தியையும் தரும். பஞ்சாக்ஷர யந்திரத்தைப் பூஜித்து, பஞ்சாக்ஷர ஜெபம் செய்து இந்த நாளில் சித்தி அடையலாம். மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஒரு லட்சம் ஜெபம் செய்து பத்தாயிரம் ஹோமம் செய்தால் இந்த மந்திரம் பரிபூரண சித்தியாகும். இயலாதவர்கள் பஞ்சாக்ஷர சம்புடமாக ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.
சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்.

கருத்துகள் இல்லை: