வியாழன், 18 டிசம்பர், 2008

சித்தர்களை தெரிந்துகொள்வோம்


சித்தர்களின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். இனி பதினெண் சித்தர்களில் ஒவ்வொருவரின் தனிச்சிறப்புகளையும் அறிந்துகொள்வோம். சித்தர்களின் சிறப்பு என்பது அவர்களது பிறப்பு, வளர்ப்பு போன்ற புறவாழ்வு தொடர்பானதல்ல என்பதை முன்பே பார்த்தோம். அவர்களைச் சுற்றியிருக்கும் புற உலகின் விடுதலைக்காக, தங்களின் அக உலகுக்குள் தேடிக் கண்டடைந்த தத்துவங்களே அவர்களின் தனிச்சிறப்பு.அதனடிப்படையில் சித்தர்களின் சித்தரான அகத்தியரின் தனிச்சிறப்பை இந்தப் பகுதியின் தொடக்கத்தில் பார்த்தோம். இந்த இதழில் போகரைப் பற்றி பார்ப்போம்.போகம் என்றால் இன்பம். மனித இனம் நோய் ஒழிந்து மகழ்ச்சியுடன் இருப்பதற்காக பாடுபட்டவர் என்பது அவர் பெயரிலேயே விளங்கும். இவர் சீனத்திலிருந்து வந்த யாத்திரிகர் என்றும், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நிலைகொண்டவர் என்றும் பலவாறாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. போகர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு அரிய பல ஆராய்ச்சிகளைச் செய்து அங்குள்ள மக்களுக்கு சித்தத்தையும், ஞானத்தையும் பரப்பிவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார். இது தெரியாத சிலர் சீனாவிலிருந்து வந்தார் என்கின்றனர்.எனினும், நவபாஷாணத்தால் இவர் வடித்துள்ள பழனி முருகன் சிலையும், போகர் 7000 என்ற அரிய நூலும் சித்த மருத்துவ உலகுக்கு அளித்துச் சென்ற அருங்கொடைகளாகும். அத்துடன், போகர் நிகண்டு, போகர் கற்பம் 3000, போகர் சரக்கு வைப்பு 800, போகர் வாசி யோகம் என்று இன்னும் பல நூல்களையும் ஆக்கி அளித்துள்ளார்.போகரின் சமாதி இன்றும் பழனியில் இருக்கிறது. கதிர்காமம், திருத்தணிகை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் போகர் சமாதி நிலையில் இருந்து முருகப் பெருமானை தியானித்துள்ளார் என்றும் தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன. தமிழ்க் கடவுளான முருகன் மீது, போகருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளதை இந்தத் தகவல்கள் மூலம் உணர முடிகிறது. அவர்காலத்தில் புழக்கத்திலிருந்த பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றும் இவரைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன. போகரைப் பொறுத்தவரை மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களும், ஆற்றியுள்ள பணிகளும் மருத்துவம் சார்ந்தவையாகவே உள்ளன.பழனியில் இவர் வடித்துள்ள நவபாஷாண சிலை நீர், நெருப்பு போன்றவற்றால் அழிக்க முடியாத தன்மை கொண்டது. இதனால்தான் பன்னெடுங் காலமாகியும் பழனி முருகனின் சிலை இன்னும் நிலைத்து நிற்கிறது என்கிறார்கள் தமிழ் மருத்துவ வல்லுநர்கள். இதிலிருந்து போகர் இந்தியாவில் தான் பிறந்தார் என்பது உண்மையாகிறது.போகர் கண்டறிந்து சொன்ன ஆய்வுகளிலேயே ‘முப்புவின் ரகசியம்’ என்ற காயகல்ப முறை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த முறை கைவரப்பெற்றாலே ஒருவர் முழுச் சித்தர் ஆகிவிட முடியும் என்றும் சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவிர்க்கவே முடியாதவையான மூப்பு, பிணி, சாக்காடு மூன்றையும் போகரின் முப்பு ரகசியத்தால் முறியடித்துவிட முடியும் என்பதும் சித்தர்களின் முழு நம்பிக்கையாக இருக்கிறது.முப்பு ரகசியத்தை முறையாகக் கற்றாலே, மனித இனத்தின் அனைத்து நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்பது சித்தர் மரபில் வந்த ஆன்றோர்களின் கருத்து.போகரின் மருத்துவ நூல்களை ஆய்வு செய்தால், இதுவரை மருந்தே கண்டுபிடிக்கப்படாத பல நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்பதை அவருடைய மூல நூல்களை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். சித்தர்களின் எந்த ஒரு தத்துவமும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறப்பட்டவையல்ல. ஆண்டுகள் பல தவமிருந்து, ஆய்ந்து, தெளிந்து கூறப்பட்டவை. சித்த மருத்துவமானது அறிவை அறிவால் அறிந்து, ஆராய்ந்து சொல்லப்பட்டவை. எனவே, இன்றைய விஞ்ஞானப் பகுப்புக்கும் ஆய்வுக்கும் முற்றிலும் தகுதி கொண்டவை.சித்தர்கள் அருளிய மருந்துகளை ஆராய்ச்சி செய்ய பலநூறு ஆண்டுகள் தேவைப்படும். மேலும் பல்லாயிரம் விஞ்ஞானிகளும் தேவை

கருத்துகள் இல்லை: