செவ்வாய், 9 டிசம்பர், 2008

கண்ணனின் உறைவிடம் எது?

யமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாதுதிகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காகஉபவாசம் இருக்கின்ற தினம்.. கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றைக் கடந்துசெல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்."சரி," என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்தபானைகளைப் பார்த்தார்.உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது - வேண்டுமா?" என்று கேட்டார்கள்." கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொருபெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள்.அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்வயிறு முட்ட, ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்முடித்தவர், கரையைக் கடக்கும் முகமாக ஆற்றை நோக்கி நின்றவாறுகணீரென்று குரல் கொடுத்துச் சத்தமாக இப்படிச் சொன்னார்"யேய் மாயக் கண்ணா!, நான் உன் பக்தனென்பது உண்மையானால்,நீ என் நெஞ்சிற்குள் குடியிருப்பது உண்மையானால், நான் இன்றுஉபவாசம் இருப்பது உண்மையானால், இந்த வெள்ளத்தை நிறுத்திஎனக்கு ஆற்றைக் கடக்க வழிவிடு" என்றார்.என்ன ஆச்சரியம்!மின்னல் வேகத்தில் ஆற்றின் வெள்ளம் தனிந்தது. அதோடு மட்டுமா -ஆற்றின் நடுவே பத்தடிக்குப் பிளவு ஏற்பட்டு இருபக்க கரைகளையும்இணைக்கும் பாதை ஏற்பட்டது. பாதையில், மண் , சேறு எதுவுமின்றிநடந்து செல்லும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது.வசிஷ்டரின் கையசைவிற்குக் கட்டுப்பட்ட கோபிகைகள் பின்தொடர,வசிஷ்டர் உட்பட அனைவரும் மறுகரையை அடைந்தார்கள்.அனைவரின் பிரமிப்பும் அகலுமுன்பே, பிளவு ஒன்று சேர யமுனைஆறு மீண்டும் பழைய பிரவாகத்தோடு ஓடத்துவங்கியது.அததனை பெண்களும் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டுப்புறப்பட எத்தனித்தார்கள்.அவர்களில் ஒருத்தி மட்டும், குறுகுறுப்போடு வசிஷ்டரைப்பார்த்தவள், "ஸ்வாமீஜி, ஒரு சிறு சந்தேகம் உள்ளது -கேட்கலாமா?" என்றாள்.அவரும், "கேள் பெண்ணே!" என்றார்."எவ்வளவு பெரிய முனிவர் நீங்கள் - ஏன் பொய் சொன்னீர்கள்?""என்னம்மா, பொய் சொன்னேன்?""கண்ணா, நான் உபவாசம் இருப்பது உண்மையானால் என்றுசொன்னீர்களல்லவா - அது பொய்தானே?"" அது பொய்யல்ல, உண்மைதான்!""அப்படியென்றால் நாங்கள் கொடுத்த வெண்ணெய் உருண்டைகள்எல்லாம் எங்கே போயிற்று?""என்னம்மா, என் வயசென்ன? அவ்வளவு வெண்ணையையும்நான் எப்படிச் சாப்பிட்டிருக்க முடியும்? என் நெஞ்சிற்குள் குடியிருக்கும்அந்த மாயக் கண்ணன்தான் உங்கள் பானைகளை எட்டிப் பார்த்து,உங்களிடமிருந்து வெண்ணையை வாங்க வைத்தான்.உண்டதும் அவன்தான், வழிவிட்டதும் அவன்தான் - இப்போதுபுரிகிறதா?" என்றார்.அந்தப் பெண் இந்தப் பதிலால், திகைத்து ஒன்றும் சொல்லமுடியாமல் அவரை மீண்டுமொருமுறை விழுந்து வணங்கிவிட்டு, எழுந்து சென்று விட்டாள்.ஆமாம் வசிஷ்டரின் நெஞ்சில் கண்ணபிரான் குடிருந்தது உண்மை!அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின் நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!

கருத்துகள் இல்லை: