திங்கள், 22 டிசம்பர், 2008

பரம்பரையாக வரும் பக்தி

சமீபத்தில் நான் ஈரோடு மாவட்டத்திலுள்ள சில திருக்கோயில்களுக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தியூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ள வெள்ளையம்பாளையம் என்ற சிற்றூரில், மிகப் புராதனமான ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயிலொன்று அடியோடு சிதிலமடைந்திருப்பதாகவும், அவ்வூர் மக்கள் அதனைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு வசதியில்லாமல் கஷ்டப்படுவதாகவும் என்னிடம் கூறி, அத்திருக்கோயிலை வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களும் அன்புடன் என்னை வெள்ளையம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஒருகாலத்தில் அந்தப் பகுதிக்கே ஒளிவிளக்காகத் திகழ்ந்த அத்திருக்கோயிலின் நிலையைக் கண்டு என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்றேன். இக்கோயிலின் நிலையைவிட என் மனதைத் தொட்டது அவ்வூர் மக்களின் ஸ்ரீகிருஷ்ண பக்தி. அடியோடு சிதிலமடைந்திருந்தாலும் கண்ணனின் திருக்கோயிலை அவ்வூர் மக்கள் அனைவரும் - ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உட்பட தங்கள் உயிரினும் மேலாக அதனைப் பாதுகாத்து, தவறாமல் பூஜித்து வருவதைக் கண்டு பிரமித்தேன். கள்ளம்கபடமில்லாத, முகத்தில் பால் வடியும் குழந்தைகள் அனைவரும் பகவன்நாமாவைப் பாடியபோது என் வசமிழந்தேன். மிகவும் சாதாரண சிற்றூர்தான் அது! மக்களிடையே செல்வச் செழிப்புமில்லை. இந்நிலையிலும் அவர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் பிரகாசித்து, ஆன்மிக ஒளிவீசிய பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.இவை அனைத்திற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்பவர், அவ்வூராரின் மதிப்புக்கும், மரியாதைக்கும், அன்புக்கும் பாத்திரரான திரு. சி. பெரியசாமி என்னும் பெரியவர்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஊர் குழந்தைகள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்கள் உள்ளத்தில் பக்தி என்ற நெறியை ஊட்டி, தெய்வீகப் பாடல்களையும் அவர்களுக்குக் கற்று கொடுத்து வருகிறார் இப்பெரியவர்.வாரம் ஒரு ரூபாய்!அடியோடு நிலைகுலைந்துள்ள இத்திருக்கோயிலின் சந்நிதியில் விக்கிரகம், படங்கள் ஆகியவற்றை வைத்துப் பூசாற்றிப் பூஜைகள் செய்து நைவேத்தியமும் செய்து வருகிறார் திரு. பெரியசாமி. சிறு பூஜையானாலும் தினமும் செய்யவேண்டுமல்லவா? தீபம் எரிய வேண்டுமென்றால் அதற்கும் எண்ணெய், திரி போன்றவற்றை வாங்குவதற்குப் பணம் வேண்டுமே! என்ன செய்வது என்பது திரு. பெரியசாமி அவர்களின் பிரச்சினை. அதற்காக ஒரு வழியும் வகுத்தார் அவர்.ஒவ்வொரு வீட்டிலும் வாரம் ஒரு ரூபாயைத் திருக்கோயிலுக்குத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். பரம்பரையாக வரும் பக்தி!இத்தகைய பக்தி, திரு. பெரியசாமிக்கு எவ்விதம் வந்தது? இவரது தந்தைவழி முப்பாட்டனார் திரு. பெரிய ராமதாஸ் அவர்கள் ஆண்டுதோறும் ஊர் மக்கள் அனைவரையும் பாத யாத்திரையாகத் திருப்பதி-திருமலைக்குப் புரட்டாசி மாதத்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அதே பழக்கத்தை இவரது பாட்டனாரான திரு. சின்ன ராமதாஸ் அவர்களும் கடைப்பிடித்து வந்தார்.திரு. பெரியசாமியின் பாட்டனார் காலத்தில் வெள்ளையம்பாளையத்தில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்தனர். அக்காலத்தில் ஆங்கிலேயர்களை `வெள்ளையர்கள்' என உள்ளூர் மக்கள் அழைப்பது வழக்கம். அதிகளவில் வெள்ளையர்கள் குடியேறியதால் `வெள்ளையர்பாளையம்' என இவ்வூர் அழைக்கப்பட்டது. ஆனால் இவ்வூரின் புராதன பெயர் மதுராபுரி என்பதாகும். ஆனால், வெள்ளையம்பாளையம் என்ற பெயரே காலக்கிரமத்தில் நிலைகொண்டு விட்டது.ஆங்கிலேயர்களின் பிரவேசத்தினால் இவ்வூரின் சூழ்நிலையே மாறத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாக மிகவும் பிரசித்திபெற்று விளங்கிய இக்கண்ணன் கோயிலின் அன்றாட பூஜைகள் பாதிக்கப்பட்டன. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த கண்ணன், தனது சக்தியினால் ஊர்மக்களுக்குத் தனது தெய்வீக அருளை வாரிவாரி வழங்கியதால், அவனது லீலைகளைக் கண்டு ஊர்மக்கள் அவனிடம் அன்பு வைத்து அவனை ``மாயக்கண்ணன்'' என்று செல்லமாகக் கூப்பிடுவது வழக்கம். ஆதலால் இத்திருக்கோயில் பெருமான் மாயன் பெருமான் என்றும், கோயில் மாயன் பெருமான் திருக்கோயில் என்றும் அழைக்கப்படலாயிற்று.ஊர் மக்களின் ஆர்வம்!எவ்விதமாவது இத்திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து, தங்கள் அன்புத் தெய்வமான ஸ்ரீ கண்ணனுக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வமுடன் இவ்வூர் மக்கள் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு விநாடி பிரமித்துவிட்டேன். தற்போது ஊர்மக்கள் ஒன்றுகூடி, திரு. சி. பெரியசாமி அவர்களையே தலைவராகவும், திரு. பெ. நாராயணசாமி அவர்களை உபதலைவராகவும், திரு. றி.ஷி. தவசியப்பன் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு, ஒரு திருப்பணி அமைப்பை உருவாக்கி, அரசாங்கத்திடம் பதிவு செய்து கொண்டுமுள்ளனர்.திருக்கோயிலுக்கு நிலமிருக்கிறது. ஊர்மக்கள் இதயத்தில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளையம்பாளையம் மக்களின் பக்திப்பெருக்கைக் கண்டு என் மனம் பாரத புண்ணியபூமியின் சென்ற கால சரித்திரத்தின் சோக நிலைக்குச் சென்று நிலைத்தது. தங்கள் சுயநலன்களுக்காகத் தங்கள் தாய் மதத்தைக் காட்டிக்கொடுத்துள்ளவர்கள் உலவும் இத்தமிழகத்தில் இப்படியும் பக்திகொண்ட ஊர்மக்கள் இருப்பதை நினைத்து என் நெஞ்சம் பெருமிதமடைந்தது. வெள்ளையம்பாளையம் கண்ணன் திருக்கோயில் புனர்நிர்மாணத்திற்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டியது நம் புனித கடமையாகும். தமிழக மக்கள் எங்கிருந்தாலும் தங்கள் வசதிக்குட்பட்டு மகத்தான இப்புண்ணிய கைங்கர்யத்திற்கு உதவ வேண்டுகிறோம். வெள்ளையம்பாளையத்தைப் பார்த்தாவது இந்துக்களாகப் பிறக்கும் பேறு பெற்ற அனைவரும் தாங்கள் பிறந்துள்ள நெறிக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தங்கள் உதவிகளை அனுப்பும்படி வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி :ஸ்ரீ மாயன் பெருமாள் நற்பணி அறக்கட்டளை,(பதிவு எண் நெ : 12394/12-11-2008)வெள்ளையம்பாளையம் (Via) அந்தியூர்,பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை: